போயஸ் தோட்டத்தில் நடந்தது என்ன?: பொன்னையன் போட்டார் புது குண்டு

சென்னை…
 ஜெயலலிதாவின் 69வது பிறந்த நாளில், சென்னை ஆர்.கே.நகரில் நடக்கும் பிரம்மாண்டமான விழாவில், வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த அறிவிப்பை வெளியிடுவேன் என, முன்னாள் முதல்வர் பன்னீர்செல்வம் கூறி வந்தார். ஆனால், வெளியிடவில்லை. 
இதனால், பன்னீர்செல்வம், பிப்., 24ல், கலந்து கொண்ட நிகழ்ச்சிகள் அனைத்தும் சப்பென்று நிறைவடைந்தன. மக்கள் மத்தியிலும், பன்னீர்செல்வம் மீது எரிச்சல் ஏற்படுத்தியது.
இதையடுத்து, பன்னீர்செல்வம் தரப்பினர், நேற்று, கூடி ஆலோசனை நடத்தினர். அந்த ஆலோசனையின் முடிவில், பிப்., 24ல், பன்னீர்செல்வம் வெளியிட இருந்த அறிவிப்பை, கட்சியின் செய்தித் தொடர்பாளரும் முன்னாள் அமைச்சருமான பொன்னையனை வைத்து, உடனடியாக வெளியிட முடிவெடுக்கப்பட்டது.
ஜெ., மீது தாக்குதல்?: 
இந்த ஆலோசனைக் கூட்டத்தைத் தொடர்ந்து, கட்சின் மாவட்ட நிர்வாகிகள் மத்தியில் பேசிய பொன்னையன், கடந்த செப்., 22ல், உடல் நிலை பாதிக்கப்பட்டு, சென்னை அப்பல்லோ மருத்துவமனைக்கு, சிகிச்சைக்காக கொண்டு வரப்பட்டார் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா. அவர், மருத்துவமனைக்குக் கொண்டு வருவதற்கு முன், சென்னை, போயஸ் தோட்டம் இல்லத்தில் வைத்து, தாக்கப்பட்டிருக்கிறார். அதன் பின், அவர் சுய நினைவு இழந்த நிலையிலேயே, அப்பல்லோ மருத்துவமனைக்கு கொண்டு வரப்பட்டிருக்கிறார். அடுத்த சில நாட்களிலேயே அவர் இறந்து போயிருக்கிறார்.
ஜெயலலிதா உடல் நிலை பாதிக்கப்பட்டு, மருத்துவமனை சிகிச்சையில் இருந்த போது, முதல்வராக இருந்த பன்னீர்செல்வம், மருத்துவரான மைத்ரேயன் உள்ளிட்ட கட்சி முக்கியஸ்தர்களைக்கூட, மருத்துவமனைக்கு உள்ளே அனுமதிக்கவில்லை. ஜெயலலிதாவைப் பார்க்கச் சொன்றால், பார்க்கச் செல்பவருக்கு நோய்த் தொற்று ஏற்படும் என்று சொல்லித் தடுத்தனர்.
அப்படியென்றால், 73 நாட்கள், ஜெயலலிதாவின் கூடவே இருந்ததாகச் சொல்கிறாரே சசிகலா, அவருக்கு ஏன் நோய்த் தொற்று ஏற்படவில்லை?இப்படி, ஜெயலலிதாவை யாரையும் சந்திக்க விடாமல் செய்ததோடு, ஜெயலலிதாவுக்கு அளிக்கப்பட்டதாக சொல்லப்பட்ட மருத்துவ சிகிச்சை அனைத்தையும் மாற்றி, மாற்றி சொன்னதில் அப்பல்லோ நிர்வாகத்துக்கும் சசிகலாவுக்கும் ரகசிய உடன்பாடு ஏற்பட்டதோ என்ற சந்தேகம் இருக்கிறது.
 இல்லையென்றால், சிகிச்சை விபரங்களைக்கூட ஏன் மாற்றி மாற்றி சொல்ல வேண்டும்? 
தொண்டர்கள் உற்சாகம் : 
விரைவில், தமிழகத்தின் பட்டி தொட்டி எங்கும் தீவிர பிரசார சுற்றுப் பயணம் செய்து, பொதுமக்கள், கட்சித் தொண்டர்களை சந்திக்கவிருக்கும் பன்னீர்செல்வம், இப்படிப்பட்ட அதிர்ச்சிகரமான தகவல்கள் அனைத்தையும் மக்கள் மத்தியில் வெளியிடுவார் என்றார். பொன்னையனின் இந்தப் பேச்சால், கட்சித் தொண்டர்கள் உற்சாகம் அடைந்தனர்.
இந்த விவரம் அறிந்து, சசிகலா தரப்பு, கடும் அதிர்ச்சி அடைந்துள்ளதாகக் கூறப்படுகிறது. இப்படி அதிரடியாக பேசுவோர் மீது, சட்ட ரீதியிலான நடவடிக்கை எடுப்பது குறித்தும், துணைப் பொதுச் செயலர் தினகரன் ஆலோசித்து வருகிறார் என, அ.தி.மு.க., வட்டாரங்கள் கூறுகின்றன.