செங்கோட்டை-நியூ ஆரியங்காவு ஒடாத ரயிலுக்கு விழா: பயணிகள் அதிர்ச்சி!

செங்கோட்டை- நியூ ஆரியங்காவு ஒடாத ரயிலுக்கு விழா எடுத்ததால் ரயில் பயணிகள் அதிர்ச்சியடைந்தனர்.

செங்கோட்டை-புனலூர் இடையே 49.5 கிலோ மீட்டர் தூரம் அகல ரயில் பாதை அமைக்கும் பணிகள் கடந்த 6 ஆண்டுகளாக நடைபெற்றது. இதனால் இம்மார்க்கத்தில் கடந்த 2010ம் ஆண்டு மீட்டர் கேஜ் ரயில் போக்குவரத்து நிறுத்தப்பட்டது

இதையடுத்து நடந்துவந்த அகல ரயில் பாதை திட்டப்பணிகள் தற்போது முடிவடைந்துள்ளது. நியூஆரியங்காவு ரயில் நிலையம் புனரமைக்கப்பட்டு, நடை மேடை, இருக்கை வசதிகள், வர்ணம் பூச்சு பணிகள் துரிதமாக நடைபெற்று முடிந்தது. இதனால் மார்ச் மாதத்தில் இந்த தடத்தில் ரயில் சேவை துவங்கும் என ரயில்வேத்துறை அதிகாரப்பூர்வமாக அறிவித்திருந்தது.

இதன்படி, செங்கோட்டையிலிருந்து நியூ ஆரியங்காவு இடையிலான அகல ரயில் பாதையை மத்திய ரயில்வே அமைச்சர் சுரேஷ் பிராபகர் பிரபு  சென்னையிலிருந்து காணொலிக் காட்சி மூலம் இன்று துவக்கி வைத்தார்.

செங்கோட்டையில் இன்று துவக்க விழா மட்டுமே நடந்தது.ரயில் சேவை தொடங்கப்படவில்லை. இதனால் ஓடாத ரயிலுக்கு விழா எடுத்தத்தால் பயணிகள் அதிர்ச்சியடைந்தனர்.

இன்னும் ஒருசில தினங்களில் இந்த ரயில்களுக்கான நேரம் முறைப்படி  நிர்ணயிக்கப்பட்டு, செங்கோட்டை- நியூ ஆரியங்காவு வரை தினமும் ரயில்கள் இயக்கப்பட உள்ளதாக ரயில்வே வட்டாரங்கள் தெரிவித்தனர்.

இந்த விழாவில் கொல்லம் எம்.பி பிரேமச்சந்திரன், தென்காசி எம்.பி வசந்தி முருகேசன், மதுரை கோட்ட ரயில்வே மேலாளர் சுனில் குமார் கர்க், கடையநல்லூர் எம்.எல்.ஏ அபூபக்கர், ஆரியங்காவு கிராம பஞ்சாயத்து தலைவர் சுரேஷ்பாபு உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.