சென்னை: சென்னை துறைமுகத்தில், நான்கு கன்டெய்னர்களில் வருவாய் புலனாய்வு துறையினர் தீவிர சோதனை நடத்தி வருகின்றனர். அந்த கன்டெய்னர்களில் இருப்பது, ‛ஹவாலா' பணமா, கள்ள நோட்டுகளா, தடை செய்யப்பட்ட ஆயுத பொருட்களா என்ற சந்தேகம் எழுந்துள்ளது.சென்னை துறைமுகத்தில், ஜீரோ கேட் மூலமே, வாகனங்கள் உள்ளே சென்று வர முடியும். இந்த கேட், நேற்று மாலை முதல் மூடப்பட்டு விட்டது. இதனால் சரக்கு கன்டெய்னர்கள் ஏற்றிய லாரிகள் ஆங்காங்கே நிறுத்தப்பட்டு, போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது. இதற்கான காரணம் குறித்து கேட்ட போது தான் வருவாய் புலனாய்வு துறையினர் நடத்தி வரும் சோதனை குறித்து தகவல் கிடைத்தது.
*நான்கு கன்டெய்னர்கள்*
துறைமுகம் உள்ளே, நான்கு கன்டெய்னர்கள் மீது, அவர்களுக்கு சந்தேகம் ஏற்பட்டுள்ளது. அவற்றை தீவிரமாக சோதனை செய்து வருகின்றனர். அந்த கன்டெய்னர்களில், கள்ள நோட்டுகள் இருக்கலாம் என்ற தகவல் வேகமாக பரவி வருகிறது.
இத்துடன், ‛ஹவாலா' பணமாக கூட இருக்க கூடும், தடை செய்யப்பட்ட ஆயுத பொருட்களும் இருக்கலாம் என்றும் கூறப்படுகிறது. சென்னை துறை முகத்தை சுற்றி, 32 இடங்களில், சரக்கு பெட்டக நிலையங்கள் உள்ளன. இங்கு தான் கன்டெய்னர்கள் வைக்கப்பட்டு இருக்கும். அந்த இடங்களிலும் தீவிர சோதனை நடந்து வருகிறது. மார்ச் 1ம் தேதிக்குப் பிறகு சென்னைக்கு வந்துள்ள கன்டெய்னர்களில் தான் தீவிர சோதனை நடத்தப்பட்டு வருகிறது.
*ஆர்.கே.நகர் தொகுதி*
இடைத்தேர்தல் நடக்க உள்ள ஆர்.கே.நகர் தொகுதியில், விம்கோ நகர் என்ற பகுதி உள்ளது. இங்கும் ஒரு சரக்கு பெட்டக நிலையம் உள்ளது. அங்குள்ள கன்டெய்னர்களில், பணம் உள்ளதாகவும், தொகுதி மக்களுக்கு வழங்க வைத்துள்ளதாகவும் உறுதி செய்யப்படாத தகவல் ஒன்று உலா வருகிறது. அந்த இடத்தில் ஏராளமான மக்கள் குவிந்து இருப்பதும் சந்தேகத்தை வலுப்படுத்தி உள்ளது.