‘நண்பேன்டா’ படத்துக்கு வரிவிலக்கு கோரி வழக்கு: அரசுக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவு

Nanbenda சென்னை: ‘நண்பேன்டா’ படத்துக்கு வரி விலக்குக்கோரி தொடரப்பட்ட வழக்கில், தமிழக அரசுக்கு நோட்டீஸ் அனுப்ப சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. உதயநிதி ஸ்டாலின், ‘ரெட் ஜெயன்ட் மூவி மேக்கர்ஸ்’ நிறுவனத்தின் மூலம் ‘நண்பேன்டா’ படத்தை தயாரித்துள்ளார். இந்தப் படத்தின் கதாநாயகனும் இவரே. இந்தப் படம் நேற்று தமிழகமெங்கும் வெளியானது. நண்பேன்டா படத்துக்கு கேளிக்கை வரிச் சலுகை கோரி, தமிழக அரசிடம் உதயநிதி ஸ்டாலின் விண்ணப்பித்தார். ஆனால், கேளிக்கை வரிவிலக்கு அளிக்க தமிழக் அரசு மறுத்து விட்டது. இதை எதிர்த்து சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மனுவில், ‘தமிழ்க் கலாச்சாரத்தை வளர்க்கும் விதமாக தமிழில் தலைப்பு வைத்துள்ள திரைப் படங்களுக்கு தமிழக அரசு கேளிக்கை வரி விலக்கு அளிக்கிறது. நண்பேன்டா படத்துக்கு வரிவிலக்கு கோரி கடந்த மார்ச் மாதம் விண்ணப்பித்தோம். இதையடுத்து எங்களது படத்தைப் பார்வையிட்ட நிபுணர் குழு, இப்படத்தில் ஆபாசம், வன்முறைக் காட்சிகள் இருப்பதாகவும், ஆங்கிலச் சொற்கள் அதிகளவில் பயன்படுத்தப்பட்டுள்ளதாகவும் கூறி வரிவிலக்கு அளிக்க மறுத்து விட்டது. ஆனால், இப்படத்துக்கு சென்சார் போர்டு அனைத்துத் தரப்பினரும் பார்க்கக் கூடிய படம் என்ற முறையில் ‘யு’ சான்றிதழ் வழங்கியுள்ளது. எனவே, எங்களது படத்துக்கு கேளிக்கை வரிவிலக்கு அளிக்க தமிழக அரசுக்கு உத்தரவிட வேண்டும் ’ என்று கோரியிருந்தார். இம்மனு நீதிபதி எஸ்.வைத்தியநாதன் முன்பு விசாரணைக்கு வந்தது. மனுதாரர் சார்பில் மூத்த வழக்கறிஞர் பி. வில்சன் ஆஜரானார். மனுவை விசாரித்த நீதிபதி, இந்த மனு மீது பதிலளிக்கும்படி தமிழக அரசுக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டார். மேலும், நண்பேன்டா படத்துக்கு வசூலிக்கப்படும் கேளிக்கை வரி, இவ்வழக்கின் இறுதித் தீர்ப்புக்குக் கட்டுப்பட்டது’ என்றும் உத்தரவிட்டார். இந்த வழக்கின் அடுத்த விசாரணை வரும் 7 ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.