சென்னையில் கொரோனா நோய்த் தொற்று அதிகமாக பரவி வருவதை அடுத்து, லட்சக்கணக்கான தொழிலாளர்கள் தங்கள் சொந்த ஊருக்குத் திரும்பி வருகின்றனர்.
தமிழகத்தில் லட்சக்கணக்கான வடமாநிலத் தொழிலாளர்கள், குறிப்பாக கட்டடத் தொழில், ஹோட்டல் தொழிலில் பணியாற்றி வந்தனர். தற்போது கொரோனா இத் தொழில்களை புரட்டிப் போட்டுவிட்டதால், இவர்கள் அனைவரும் தங்கள் வேலை இழந்துவிட்டனர்.
50 நாட்களாக ஊரடங்கு காரணமாக முடங்கிக் கிடந்த இவர்கள், தங்கள் மூட்டை முடிச்சுகளுடன் சொந்த மாநிலங்களுக்கு புறப்படத் தயாராகிவிட்டனர். இவர்கள் அனைவரும் தங்கள் சொந்த மாநிலங்களுக்குச் செல்ல மத்திய அரசு, மாநில அரசுகள் ஏற்பாடுகள் செய்துள்ளன.
இதற்காக ரயில்வே துறையில் ரயில்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டு, அந்தந்த ரயில் நிலையங்களில் பாஸ் பெற்று காத்திருக்கின்றனர். வேலூர், காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்களிலும் குறிப்பாக சென்னை பெருநகரத்தில் மட்டும் 20 லட்சம் தொழிலாளர்கள் குடும்பத்துடன் தங்கி ஆண்டுக்கணக்கில் பணிபுரிந்து வந்தனர். தென் கிழக்கு ஆசியாவிலேயே கார் தயாரிப்பில் சென்னை, திருப்பெரும்புதூர் முக்கிய கேந்திரமாக விளங்குவதால் இதைச் சுற்றி ஏராளமான தொழிற்சாலைகள் இயங்கி வருகின்றன.
இங்கும் ஏராளமான தொழிலாளர்கள் ஒப்பந்த அடிப்படையில் பணியாற்றி வந்தனர். தற்போது இதில் ஏராளமான பணியாளர்கள், தங்கள் வேலையை ராஜினா செய்துவிட்டு தங்கள் மாநிலங்களுக்குப் புறப்பட்டுவிட்டனர். ஜோலார்பேட்டை, காட்பாடி, அரக்கோணம், சென்னை சென்டரல் ரயில் நிலையங்களில் இத் தொழிலாளர்களுக்கு கொரோனா பரிசோதனைகள் செய்யப்பட்டு வெளிமாநிலங்களுக்கு அனுப்பப்பட்டு வருகின்றனர்.