சென்னை: தமிழக அமைச்சர்கள், பார்வையற்ற பட்டதாரிகள் தரப்புக்கு இடையே நடத்தப் பட்ட பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டதால், அவர்களின் போராட்டம் முடிவுக்கு வந்தது. ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்ற பார்வையற்ற பட்டதாரிகள் அனைவருக்கும் பணி நியமனம், வேலைக்காகக் காத்திருக்கும் பார்வையற்ற மாற்றுத் திறனாளிகளுக்கான உதவித் தொகை ரூ.1000 ஆக உயர்த்தி வழங்கவேண்டும் ஆகியவை உள்ளிட்ட 9 அம்சக் கோரிக்கைகளை வலியுறுத்தி பார்வையற்ற மாற்றுத் திறனாளிகள் சென்னை, திருச்சியில் 10வது நாளாக தொடர் போராட்டம் நடத்தி வந்தனர். இந்த நிலையில் சென்னை தலைமைச் செயலகம் முன்பு பார்வையற்ற பட்டதாரிகள் பெட்ரோல் ஊற்றி தீக்குளிக்க முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது. ஜேம்ஸ், ரகு ஆகிய இரு பட்டதாரிகளும் முதல்வரின் வாகன அணிவகுப்பு வருவதற்கு சற்று முன்னதாக தீக்குளிக்க முயன்றனர். பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த போலீஸார் விரைந்து வந்து அவர்கள் இருவர் மீதும் தண்ணீரை ஊற்றினர். பின்னர் இருவரையும் கைது செய்தனர். அப்போது போலீஸாருக்கும் பார்வையற்ற பட்டதாரிகளுக்கும் இடையே பிரச்னை ஏற்பட்டது. இந்நிலையில், பார்வையற்ற பட்டதாரிகளுடன் வீரமணி, பழனியப்பன், வளர்மதி ஆகிய மூன்று தமிழக அமைச்சர்கள் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். அப்போது அவர்களின் 9 கோரிக்கைகளில் பள்ளி, கல்லூரிகளில் வேலை வாய்ப்பை ஏற்படுத்தித் தருவது, வேலையில்லா பார்வையற்ற பட்டதாரிகளுக்கு உதவித்தொகையை அதிகரிப்பது உள்ளிட்ட 4 கோரிக்கைகளை நிறைவேற்றுவதாக அமைச்சர்கள் உறுதி அளித்தனர். இதை அடுத்து, பார்வையற்ற பட்டதாரிகள் போராட்டத்தை வாபஸ் பெற்றுக்கொண்டனர்.
போராட்டம் வாபஸ்: பார்வையற்ற பட்டதாரிகளுடன் அமைச்சர்கள் பேச்சுவார்த்தையில் உடன்பாடு
Popular Categories