தேமுதிக பொதுச்செயலாளர் விஜயகாந்த் வெளியிட்டுள்ள அறிக்கையில்
தமிழ்நாட்டில் படித்த, படிக்காத இளைஞர்களுக்கு வேலை இல்லாத நிலை ஏற்பட்டுள்ள காரணத்தால், வெளிநாடுகளுக்கு சென்று குடும்பத்தை காப்பாற்ற வேண்டும் என்கிற அவலநிலை உள்ளது. இதனால் பல இளைஞர்கள் வெளிநாடுகளுக்கு வேலைக்கு சென்று, ஏமாற்றும் கும்பலிடம் மாட்டிக்கொண்டு கொத்தடிமைகளாக பணிபுரியக்கூடிய நிலை ஏற்படுகிறது. மேலும் வேலைபார்த்ததற்கான மாதச்சம்பளம் கொடுக்காமல், பல மணிநேரம் வேலைபார்க்கச் சொல்லி சித்தரவதை செய்வதும் வாடிக்கையாக உள்ளது. இதற்கு எடுத்துக்காட்டாக இராமநாதபுரம் மாவட்டம், கடலாடி தாலுகா, கண்ணிராஜபுரத்தைச் சேர்ந்த கா.மெய்கண்டன் (எ) சந்திரன் என்பவர் மலேசியாவில் உள்ள தனியார் உணவகத்தில் 4 வருடங்களாக வேலைபார்த்து வந்தார், சரிவர சம்பளம் கொடுக்காமல், வேலைபார்க்க சொல்லி கொடுமைபடுத்தியுள்ளார்கள். இதே உணவகத்தில் சுமார் 40க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளார்கள் என்பதும் தெரியவருகிறது. இதை அறிந்தவுடன் இராமநாதபுரம் மாவட்ட கழக செயலாளர் சிங்கை ஜின்னாவை தொலைபேசியில் நான் தொடர்பு கொண்டு, இந்த சம்பவம் குறித்து அவர்கள் குடும்பத்தினரிடம் விசாரித்து உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறினேன். அதன் அடிப்படையில் நேற்று (26.10.2017) இராமநாதபுரம் மாவட்ட ஆட்சியரிடம் பாதிக்கப்பட்ட குடும்பத்தினருடன் சென்று மெய்கண்டனின் மனைவி தன் கணவரை மீட்டுத்தரும்படி கோரிக்கை வைத்துள்ளார். இதேபோல் பல குடும்பத்தில் இருந்து வெளிநாடுகளுக்கு வேலைக்கு சென்ற இளைஞர்கள் பாதிக்கப்பட்டுள்ளார்கள் என தெரியவருகிறது. இதை மத்திய, மாநில அரசுகள், மலேசியாவில் உள்ள இந்திய தூதரகத்தின் மூலம் பாதிக்கப்பட்ட தமிழக இளைஞர்களை மீட்டு தாயகம் திரும்புவதற்கு உடனடியாக நடவடிக்கை எடுப்பதோடு மட்டுமல்லாமல், ஆசைவார்த்தைகள் கூறி ஏமாற்றி வெளிநாடுகளுக்கு வேலைக்கு அழைத்துச்செல்லும் கும்பல் யார் என்பதை கண்டறிந்து அவர்கள் மீது தக்க நடவடிக்கையும் எடுக்கவேண்டும் என கேட்டுக்கொள்கிறேன்.
இவ்வாறு அறிக்கையில் தெரிவித்துள்ளார்
ALSO READ:  ஒரு கைத்தறி தயாரிப்பையாவது வாங்கி, அதுகுறித்த வீடியோவை பகிருங்கள்!

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Trending