
கடலூரில் மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் உருவம் பொறிக்கப்பட்ட டி-சர்ட்டுகள், டிஃபன் பாக்ஸ்களை தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
தமிழகத்தில் தேர்தல் நடத்தை விதிமுறை அமலில் உள்ளது. அரசியல் கட்சிகள் வாக்காளர்களுக்கு பணம் கொடுப்பதை தடுக்கும் பொருட்டு தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் தமிழகம் முழுவதும் பல்வேறு அதிரடி நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றனர். அதே போல் பரிசுப் பொருட்கள் கொடுக்கும் அரசியல் கட்சிகள் மீதும் நடவடிக்கை எடுக்கப்படும்.
மக்கள் ரொக்கமாக 50 ஆயிரம் வரை கொண்டு செல்லலாம். அதற்கு மேல் ரொக்கமாக கொண்டு சென்றால் உரிய ஆவணங்களை காண்பிக்க வேண்டும்.
அதே போல், தங்கம், வெள்ளி நகைகள் என எதை கொண்டு சென்றாலும் உரிய ஆவணத்தை சமர்ப்பிக்க வேண்டும்.

இந்நிலையில் கடலூர் – புதுச்சேரி சாலையில் பெரிய காட்டு பாளையம் பகுதியில் தேர்தல் பறக்கும் படையினர் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, கடலூரை நோக்கி வந்த மினி லாரியை மறித்து அதிகாரிகள் சோதனை செய்தனர்.
அப்போது மினி வேனில் மூன்று மூட்டைகளில் கமல்ஹாசன் படம் பொறிக்கப்பட்ட பனியன்களும், மூன்று மூட்டைகளில் சில்வர் டிஃபன் பாக்ஸ்களும் இருந்தது. அவற்றிற்கு உரிய ஆவணம் இல்லாததால் அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
பறிமுதல் செய்த பொருட்களை தேர்தல் பறக்கும் படையினர், கடலூர் கோட்டாட்சியரிடம் ஒப்படைத்தனர். தேர்தலையொட்டி வாக்காளர்களுக்கு விநியோகிக்க கொண்டு செல்லப்பட்டதா என விசாரணை நடைபெற்று வருகிறது.