சென்னை: எழுத்தாளர்களின் கருத்துச் சுதந்திரத்தை பாதுகாக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று திமுக தலைவர் கருணாநிதி கூறியுள்ளார். இது தொடர்பாக அவர் நேற்று வெளியிட்ட அறிக்கை: ஸ்ரீரங்கம் தொகுதி இடைத்தேர்தலில் ஆளுங்கட்சியினர் வாக்குக்கு ரூ.2 ஆயிரம் பணம் கொடுத்தது குறித்து ஒருவர் தேர்தல் ஆணையத்துக்கு டிடியுடன் கடிதம் அனுப்பியுள்ளார். அ.தி.மு.க. பணம் கொடுத்துத்தான் வாக்கு கேட்டது என்பதற்கு இது ஒரு நல்ல சான்று. நெல்லையில் மூத்த அதிகாரி ஒருவர் தற்கொலை செய்து கொண்டதற்கு அமைச்சர் ஒருவர்தான் காரணம் என்று கூறியிருந்தேன். இது தொடர்பாக அவரிடமிருந்து கட்சிப் பதவி யையும், அரசுப் பதவியையும் பறித்துள்ளனர். ஏற்கனவே ஒரு முறை இவர் அமைச்சராக இருந்த போது, தவறு செய்தார் என்பதற்காக அவர் மீது நடவடிக்கை எடுத்தார்கள். ஆனால் அவருக்கே பிறகு மீண்டும் பதவியைக் கொடுத் தார்கள். கொலு கொண்டாடுபவர்கள், வைக்கப் படும் பொம்மைகளை ஒவ்வொரு நாளும் மாற்றி மாற்றி வைப்பது போல், அ.தி.மு.க. ஆட்சியில் அமைச்சரவை மாற்றப்படுகிறது. அ.தி.மு.க. ஆட்சியில் எழுத்தாளர்கள் தாக்கப்படுவது தொடர் கதையாகிறது. கடந்த சில நாட்களுக்கு முன்புதான் பெருமாள்முருகன் என்ற எழுத்தாளர் தாக்கப்பட்டார். தற்போது, கரூர் மாவட்டம், புலியூரைச் சேர்ந்த எழுத்தாளர் புலியூர் முருகேசன் கடுமையாகத் தாக்கப்பட்டுள்ளார். இப்பிரச்சினை மேலும் பெரிதாகாமல் அரசும், காவல் துறையும் அமைதியை ஏற்படுத்த முயற்சிக்க வேண்டும். எழுத்தாளர்களின் கருத்துச் சுதந்திரத்தை பாதுகாக்கவும் அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். மார்ச் மாதத்தில் ரேஷன் கடைகளில் பொருள்களை வாங்கச் சென்றவர்களுக்கு பருப்பு வழங் கப்படவில்லை. ரேஷன் கடைகளுக்குப் பருப்பு சப்ளை செய்த நிறுவனத்துக்கு தமிழக அரசு பணம் கொடுக்காததுதான் கால தாமதத்துக்குக் காரணம் என்று கூறுகிறார்கள். 14வது நிதிக்குழு அறிக்கை மற்றும் மத்திய பட்ஜெட்டில் விலக்கிக் கொள்ளப்பட்ட உதவித்தொகை காரணமாக 2015-2016-ம் ஆண்டில் தமிழகத்துக்கு ரூ.6 ஆயிரம் கோடி அளவுக்கு இழப்பு ஏற்படுமென்று மதிப்பிடுகிறார்கள். 2013-ம் ஆண்டு தமிழகத்தில் நடந்த சாலை விபத்துகளில் 15,563 பேரும், 2014-ம் ஆண்டில் 15,190 பேரும் இறந்துள்ளனர். 2015-ம் ஆண்டில் ஜனவரியில் மட்டும் 1,337 பேர் இறந்துள்ளார்கள். இந்தியாவில் வாகன விபத்துகளால் ஏற்படும் உயிரிழப்புகளின் எண்ணிக்கையில் தமிழகம்தான் தொடர்ந்து முன்னிலையிலே உள்ளது. திமுக ஆட்சியில் மாற்றுத்திறனாளிகளுக்கு பல்வேறு சலுகைகள் அறிவிக்கப்பட்டன. அ.தி.மு.க. ஆட்சியில் 2013-ம் ஆண்டு மாற்றுத்திறனாளிகள் போராட்டம் நடத்திய போது, அவர்களின் கோரிக்கைகள் அனைத் தும் நிறைவேற்றப்படுமென ஜெயலலிதா அறிவித்தார். கோரிக்கைகளை நிறைவேற்றாத காரணத்தால் தற்போது தமிழக அரசைக் கண்டித்து தொடர் போராட்டத்தில் ஈடுபடப் போவதாக அறிவித்திருக்கிறார்கள்.
எழுத்தாளர்களின் கருத்துச் சுதந்திரத்தை பாதுகாக்க நடவடிக்கை எடுக்க கருணாநிதி கோரிக்கை
உடனுக்குடன் தினசரி தமிழ்ச் செய்திகளை உங்களது டெலிகிராம் ஆப்.,பில் பார்க்கலாம்!
தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!
https://t.me/s/dhinasari
Whatsapp - தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!
https://www.whatsapp.com/channel/dhinasari