madurai-branch-high-court மதுரை: தமிழகத்தில் தெருக்கள், ஊர்களின் பெயரிலுள்ள சாதிப் பெயர்களை நீக்குவது தொடர்பான மனுவுக்கு பதிலளிக்குமாறு, தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது. திருச்சி டாக்டர் அம்பேத்கர் அறக்கட்டளை மேலாண்மை அறங்காவலர் பொன்.தம்மபாலா சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளையில் ஒரு மனு தாக்கல் செய்தார். அதில், தமிழகத்தில் தெருக்கள் மற்றும் ஊர்களின் பெயர்களில் உள்ள சாதிப் பெயர்களை நீக்குவதற்காக உள்ளாட்சி அமைப்புகளில் தீர்மானம் நிறைவேற்ற வேண்டும். அந்தத் தீர்மானத்தின் பேரில் மேற்கொள்ளப்படும் நடவடிக்கையை மாவட்ட ஆட்சியர்கள் கண்காணித்து அரசுக்கு அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என தமிழக அரசு 3.10.1978-ஆம் தேதி அரசாணை பிறப்பித்தது. மேலும், அரசுத் துறை ஆவணங்களில் தாழ்த்தப்பட்டோர் வகுப்பில் உள்ள சாதிகளைக் குறிப்பிடும்போது, சாதிப் பெயர்களில் குறிப்பிடாமல் மொத்தமாக ஆதிதிராவிடர் வகுப்பினர் எனக் குறிப்பிட வேண்டும் என்று தமிழக ஆதி திராவிடர் நலத் துறை 24.2.2007-ல் அரசாணை பிறப்பித்தது. இந்த அரசாணைகள் அமல்படுத்தப் படவில்லை. இந்த அரசாணைகளை முறையாக அமல்படுத்தியிருந்தால் தமிழகத்தில் சாதி வேறுபாடற்ற நிலை ஏற்பட்டிருக்கும். வாக்காளர் பட்டியலிலும் தெருக்களின் பெயர்கள் சாதிப் பெயர்களில் குறிப்பிடப்பட்டுள்ளன. தெருக்கள் மற்றும் ஊர்களின் பெயர்கள் சாதிப் பெயரில் இருப்பதால், அப் பகுதிகளில் சாதிப் பாகுபாடு நிலவுகிறது. சாதிப் பெயர்களை நீக்குவது தொடர்பாக 37 ஆண்டுகளுக்கு முன் பிறப்பித்த அரசாணை இன்னமும் முறைப்படி அமலுக்கு வராதது வேதனையானது. எனவே, அரசாணை அடிப்படையில் தமிழகத்தில் தெருக்கள் மற்றும் ஊர்களின் பெயர்களில் உள்ள சாதிப் பெயர்களை நீக்க உத்தரவிட வேண்டும்” எனக் கூறப்பட்டிருந்தது. இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள் எஸ்.தமிழ்வாணன், வி.எஸ்.ரவி ஆகியோர் கொண்ட அமர்வு, தமிழக தலைமைச் செயலர், நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை முதன்மை செயலர், ஊரக மேம்பாடு மற்றும் பஞ்சாயத்து ராஜ் முதன்மை செயலர் ஆகியோருக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டது. மேலும், வழக்கு விசாரணையை வரும் மார்ச் 23ஆம் தேதிக்கு ஒத்திவைத்தது.

ALSO READ:  திருப்பரங்குன்றத்தில் வருஷாபிஷேகம்

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Trending