புதுதில்லி: ‘‘கடந்த 2011ல் உலக கோப்பை வென்ற ஆனந்தத்தில் இந்திய அணியின் 15 வீரர்களும் கண்ணீர் விட்டு அழுதோம்,’’ என, கேப்டன் தோனி தெரிவித்தார். கடந்த 1983ல் கபில்தேவ் தலைமையில் இந்திய அணி முதன் முறையாக உலக கோப்பை வென்றது. பின், 2003ல் கங்குலி தலைமையில் பைனலுக்கு முன்னேறியது தான் அதிகபட்சம். 2011ல் எழுச்சி பெற்ற இந்திய அணி, 28 ஆண்டுகளுக்குப் பின், தோனி தலைமையில் உலக கோப்பை வென்றது. இந்த நினைவுகள் குறித்து தோனி கூறியது: கடந்த 2011ல் நடந்த உலக கோப்பை தொடரின் போது ரசிகர்கள் எங்கள் மீது வைத்த அதீத நம்பிக்கை பெரும் நெருக்கடி தந்தது. லீக் சுற்றில் தொடர்ந்து வெற்றி பெற, இது இன்னும் அதிகரித்தது. எது பெரியது: முதலில் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான காலிறுதி, பெரிய போட்டி, என்றனர். இதில் வெற்றி பெற்றதும், பாகிஸ்தானுக்கு எதிரான அரையிறுதி தான் மிகப்பெரியது என்றும், இது தான் உண்மையான பைனல் எனவும் கூறினர்.பாகிஸ்தானை வென்றதும், ரசிகர்கள் அனைவரும் கோப்பை வெல்ல வேண்டும் என எதிர்பார்த்தனர். சாப்பிட மனமில்லை: பைனலில் (2011, ஏப்., 2) வெற்றி பெற வேண்டுமே என்ற கவலையில், சாப்பிடக் கூட தோன்றவில்லை. ஏனெனில், இந்தியர்கள் உணர்ச்சிவசப்படக் கூடியவர்கள். உலக கோப்பை வென்ற பிறகு தான், நாட்டு மக்கள் திருப்தி அடைந்தனர். பணம் முக்கியமல்ல: இந்திய கிரிக்கெட்டில் பணம் கொட்டுகிறது, வீரர்களுக்கு பெரியளவில் ஒப்பந்தங்கள் உள்ளன என, கூறுகின்றனர். ஆனால், என்ன தான் பணம் இருந்தாலும், உலக கோப்பை வெல்வது போன்ற ஒரு மகத்தான மகிழ்ச்சியை, ஒருபோதும் கொண்டு வர முடியாது. எல்லோரும் அழுதோம்: அந்த தருணத்தில் அனைவரும் உற்சாகத்தில் மிதந்தோம். கோப்பை வென்ற ஆனந்தத்தில் அழுதே விட்டேன். இப்படி அழுவேன் என நான், ஒருபோதும் நினைத்தது கிடையாது. நான் மட்டுமல்ல, 15 வீரர்கள், பயிற்சியாளர்கள், உதவியாளர்கள் என, ‘டிரசிங் ரூமில்’ இருந்த அனைவரும் அழுதனர். வீரர்களிடம் இருந்து வெளிப்பட்ட அந்த உணர்வை, இந்த உலகம் பார்த்திருக்காது. ஏனெனில், இதற்கான ‘வீடியோ’ பதிவு, ‘போட்டோ’ என, எதுவும் இல்லை. இவ்வாறு தோனி கூறினார்.
உலக கோப்பை வென்றதும் உணர்ச்சிவசத்தில் அழுதது ஏன்?: தோனி விளக்கம்
உடனுக்குடன் தினசரி தமிழ்ச் செய்திகளை உங்களது டெலிகிராம் ஆப்.,பில் பார்க்கலாம்!
தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!
https://t.me/s/dhinasari
Whatsapp - தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!
https://www.whatsapp.com/channel/dhinasari