தமிழகத்தில் பூரண மதுவிலக்கை அமல்படுத்த முடியாது என மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வை துறையின் அமைச்சர் நத்தம் விஸ்வநாதன் சட்டசபையில் நேற்று திட்டவட்டமாக அறிவித்தார்.
பூரண மதுவிலக்கு கேட்டு, எதிர்க்கட்சிகள் விடுத்த கோரிக்கைக்கு, அரசு அளித்துள்ள விளக்கமாவது :-
சட்டசபையில் மதுவிலக்கு தொடர்பாக நடைபெற்றவிவாதம்:
மார்க்சிஸ்ட் கம்யூ., – பாலபாரதி: தமிழகத்தில் மது பழக்கம் அதிகரித்துள்ளது; குழந்தைகள், இளம்பெண்கள் எல்லாம் மது அருந்தும், புதிய கலாசாரம் பரவி வருகிறது. தினமும், 38 சதவீதம் பேர், மது குடிக்கின்றனர் என, மது தொடர்பான ஆராய்ச்சிகள் கூறுகின்றன.’குடி கெட்ட பழக்கம்’ என்ற நிலை மாறி, ‘அரசே மதுக் கடைகளை திறந்துள்ளதால் குடிக்கிறோம்’ என்ற நிலை ஏற்பட்டுள்ளது. எனவே பூரண மதுவிலக்கை அமல்படுத்த வேண்டும்.
அமைச்சர் நத்தம் விஸ்வநாதன்: மது தீமை தான். ஆனால், பூரண மதுவிலக்கை அமல்படுத்தினால், தவறு செய்வோர் அதிகரிப்பர்; கள்ளச் சாராய சாவு அதிகரிக்கும்; மிகப்பெரிய தீங்கு ஏற்படும். பூரண மதுவிலக்கை அமல்படுத்திய நாடுகளாலும், அதை முழுமையாகச் செயல்படுத்த முடியவில்லை. இஸ்லாம், மதுவிற்கு எதிரானது. ஆனால், இஸ்லாமிய நாடுகள் சிலவற்றிலும், மதுவிலக்கு அமல்படுத்தப்படவில்லை. உங்கள் கட்சி, மேற்கு வங்கம் மற்றும் கேரளாவில் ஆட்சியில் இருந்த போது, மதுவிலக்கை அமல்படுத்தவில்லை. நீங்கள் ஆட்சிக்கு வரும் வாய்ப்பு உள்ள மாநிலங்களில், பூரண மதுவிலக்கை அமல்படுத்த வலியுறுத்துவதில்லை. ஆட்சிக்கு வர வாய்ப்பில்லாத மாநிலங்களில் வலியுறுத்திபேசுகிறீர்கள். தனி நபர் மது நுகர்வு தமிழகத்தில் குறைவாகவே உள்ளது. புதுச்சேரியில் தனி நபர் மது நுகர்வு, வாரத்திற்கு, 144 மில்லியாக உள்ளது. இது, கோவாவில், 108; ஆந்திராவில், 104; கேரளா மற்றும் கர்நாடகாவில், 102 மி.லி.,யாக உள்ளது. தமிழகத்தில், 85 மி.லி.,யாக உள்ளது.எதில் எல்லாம், முதலிடத்திற்கு வர வேண்டுமோ, அதில் தமிழகம் முதலிடத்தில் உள்ளது. எதில் எல்லாம் கடைசியாக இருக்க வேண்டுமோ, அதில், தமிழகம் கடைசியாக உள்ளது. மதுவை ஒழிக்க, விழிப்புணர்வு பிரசாரம் செய்ய, அனைத்துகட்சியினரையும் அழைக்கிறேன்; அனைவரும் சேர்ந்து, விழிப்புணர்வு பிரசாரம் செய்வோம். சட்டத்தின் மூலம் இதை செய்ய முடியாது; விழிப்புணர்வு மூலம் செய்வோம்.
பழங்காலத்தில், மது குடித்த மன்னரை பாராட்டி, பெண் புலவர் பாடி உள்ளார். திருவள்ளூவர் மது அருந்துவதை கண்டித்துள்ளார். தமிழகத்தில், 2,000 ஆண்டுகளுக்கு முன்பிருந்தே, மது அருந்துவோரும், மது அருந்துவோரை கண்டிப்போரும் இருந்துள்ளனர்; அது, இன்றும் தொடர்கிறது.
பாலபாரதி: காந்தியவாதி சசி பெருமாள் மரணம் ?
அமைச்சர் விஸ்வநாதன்: சசி பெருமாள் இறப்பு வருத்தத்திற்குரியது; ஆனால், அவரது போராட்ட வழிமுறை ஏற்றுக்கொள்ளக் கூடியதல்ல. காந்தியவாதிக்கு வீரம் தேவையில்லை; அகிம்சை மட்டுமே தேவை.
மனிதநேய மக்கள் கட்சி – ஜவாஹிருல்லா: எங்கள் கட்சியில், மது அருந்துவோரை, உறுப்பினராகச் சேர்ப்பதில்லை. இஸ்லாமிய நாடுகளில், சவுதி அரேபியா, குவைத் போன்ற நாடுகளில், மது விற்பனை இல்லை. லாட்டரி, கந்து வட்டி, பான்பராக் போன்றவற்றுக்கு முடிவு கட்டிய முதல்வர், மதுவிற்கும் முடிவு கட்ட வேண்டும்.
பா.ம.க., – கணேஷ்குமார்: பூரண மதுவிலக்கை அமல்படுத்துங்கள்.புதிய தமிழகம் – கிருஷ்ணசாமி: படிப்படியாகவாவது பூரண மதுவிலக்கை அமல்படுத்துங்கள்.
அமைச்சர் நத்தம் விஸ்வநாதன்: நாங்கள் மதுவை ஆதரிக்கவில்லை. மதுவிலக்கை அமல்படுத்த வேண்டும் என்ற கொள்கையை ஏற்றுக் கொள்கிறோம். ஆனால், நடைமுறையில் சாத்தியமில்லை.மதுவிலக்கை அமல்படுத்தினால், ரவுடியிசம் வளரும்; அரசு கஜானா காலியாகும். நாடு முழுவதும், மதுவிலக்கு அமல்படுத்தப்பட்டால், தமிழகத்திலும் அமலாகும். குறைந்தது, பக்கத்து மாநிலங்கள், ஒத்துழைக்க வேண்டும். இவ்வாறு விவாதம் நடந்தது.
டாஸ்மாக் ஊழியர்களுக்கு ஊதிய உயர்வு:
* டாஸ்மாக் கடைகளில், 7,152 மேற்பார்வையாளர்; 15,530 விற்பனையாளர்; 3,734 உதவி விற்பனையாளர்கள், தொகுப்பு ஊதிய முறையில், பணியாற்றி வருகின்றனர். அவர்களுக்கு முறையே, 500, 400, 300 ரூபாய் என, ஊதியம் உயர்த்தி வழங்கப்படும்; இந்த ஊதிய உயர்வு, இம்மாதம் முதல் நடைமுறைக்கு வரும். இதற்காக, ஆண்டுக்கு, 13 கோடி ரூபாய் கூடுதலாக ஒதுக்கப்படும்
* மதுவுக்கு எதிரான விழிப்புணர்வு பிரசாரம் மேற்கொள்ள ஒதுக்கப்படும் நிதி, ஒரு கோடி ரூபாயில் இருந்து, மூன்று கோடி ரூபாயாக உயர்த்தி வழங்கப்படும்
* கள்ளச் சாராய தொழிலில் ஈடுபட்டு, மனம் திருந்தியவர்களுக்கு, மறுவாழ்வு நிதி வழங்க, ஐந்து கோடி ரூபாய் மானியமாக வழங்கப்படும்.
ரூ.6,000 கோடி மது வருவாய் உயர்வு :
தமிழக அரசின், ‘டாஸ்மாக்’ நிறுவனத்திற்கு, 6,800 மதுபானக் கடைகள் உள்ளன. இவற்றில், அரசு நிர்ணயம் செய்துள்ள விலையில், பீர் மற்றும் மது வகைகள் விற்கப்படுகின்றன. இவற்றில், ஆயத்தீர்வை மற்றும் விற்பனை வரி மூலம், தமிழக அரசுக்கு வருவாய் கிடைக்கிறது.
அ.தி.மு.க., அரசு பொறுப்பேற்ற, 2011 – 12ல், 18 ஆயிரம் கோடி ரூபாய் வருவாய் கிடைத்தது. 2012 – 13ல், 22 ஆயிரம் கோடி ரூபாய் வருவாய்; 2013 – 14ல், ஆறு கோடி ரூபாய் அளவுக்கு வருவாய் குறைந்தது. அதற்கு காரணம், போலி மது வகைகள் விற்பனை.
கடந்த ஆண்டு, மதுபான விலை உயர்த்தப்பட்டது. அதனால், அரசுக்கு, 2014 – 15ம் நிதியாண்டில், 24 ஆயிரம் கோடி ரூபாய் வருவாய் கிடைத்தது. இந்த அரசு பொறுப்பேற்றதில் இருந்து, ஆண்டுதோறும் மது விற்பனை அதிகரித்து வருவதால், நான்கு ஆண்டுகளில், 6,000 கோடி ரூபாய் அளவுக்கு கூடுதலாக வருவாய் கிடைத்துள்ளது.