கடந்த சட்டமன்றத் தேர்தலில் அதிமுகவுடனான கூட்டணி அமைப்பது குறித்து மனைவி அளித்த அறிவுரையை கேட்காததால் அதற்கான பலனை அனுபவித்து வருகிறேன் என்று தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த் தெரிவித்துள்ளார்.
புதுக்கோட்டை மாவட்டம், ஆலங்குடியில், தே.மு.தி.க., சார்பில் அக்கட்சித் தலைவர் விஜயகாந்த் முன்னிலையில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் ரூ. 25 லட்சம் மதிப்பில் துப்புரவு தொழிலாளர்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது.
பொதுக் கூட்டத்தில் பேசிய விஜயகாந்த் “சர்வதேச முதலீட்டாளர்கள் மாநாடு நடத்துவதால் தமிழ்நாடு சுத்தமாகாது. துப்புரவுத் தொழிலாளர்கள் நன்றாக இருந்தால்தான் நாடு சுத்தமாகும். தமிழகத்தில் டெங்கு காய்ச்சலே இல்லை என்று அதிமுக அமைச்சர் விஜயபாஸ்கர் கூறுகிறார். ஆனால், டெங்கு காய்ச்சலால் கிரமாங்களில் மக்கள் இறந்து கொண்டே உள்ளனர். தற்போது அரசு மருத்துவமனைகளில் டாக்டர்கள் பற்றாக்குறை உள்ளது.
கடந்த சட்டமன்றத் தேர்தலில் தேமுதிகவுடன் கூட்டணி வைத்ததால்தான் அதிமுகவால் ஆட்சிக்கு வர முடிந்தது. இல்லையென்றால் அதிமுக படுதோல்வி அடைந்து திமுக ஆட்சியைப் பிடித்திருக்கும். அதிமுகவுடன் கூட்டணி வேண்டாம் என்று என் மணைவி பிரேமலதா கூறினார். ஆனால் அந்த அறிவுரையை அவர் ஏன் அப்போது வழங்கினார் என்பது எனக்கு இப்போதுதான் தெரிகிறது. அதற்கான பலனை அனுபவித்துக் கொண்டுள்ளோம்.
பேரவையில் 110 விதியின் கீழ் முதலமைச்சர் ஜெயலலிதா வெளியிடும் அறிவிப்புகள் எல்லாம் பட்டை நாமம் போடும் செயல் படுத்தப்படாத அறிவிப்புகளாகவே உள்ளது. வருகின்ற சட்ட மன்றத் தேர்தலில் யாருடன் கூட்டணி என்பது குறித்து டிசம்பர் மாதம் அறவிப்பேன்” என்று பேசினார்.