மதுரை:

மதுரையில் நிறுத்தப்பட்டிருந்த 2 அரசுப் பேருந்துகளில் நாட்டு குண்டு வெடித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மதுரை ஆரப்பாளையம் பேருந்து நிலையம் அருகே இரண்டு அரசுப் பேருந்துகள் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தன. ஒரு பேருந்து சேலத்துக்கும், இன்னொரு பேருந்து ஓசூருக்கும் செல்வதற்காக நின்றிருந்தது. பேருந்தில் அப்போது பயணிகள் யாரும் ஏறியிருக்கவில்லை. இரு பேருந்துகளுமே காலியாக இருந்த நேரத்தில் அதிகாலையில் அடுத்தடுத்து வெடிச் சத்தம் கேட்டது. இதையடுத்து போலீஸாருக்குத் தகவல் கொடுக்கப்பட்டது.

போலீஸார் விரைந்து வந்து விசாரணை நடத்தினர். பேருந்துகளில் யாரும் இல்லாததால் எவருக்கும் காயம் ஏற்படவில்லை. பேருந்துகளிலும் லேசான சேதமே ஏற்பட்டிருந்தது.

இதுகுறித்து விசாரணை நடத்தி வருவதாகக் கூறிய போலீஸ் கமிஷனர் சைலேஷ் குமார் யாதவ், வெடித்தது மிகவும் குறைந்த சக்தி கொண்ட நாட்டு வெடிகுண்டு வகையாக இருக்கலாம் என்று சந்தேகிக்கிறோம். இருப்பினும் விசாரணை முடிவில்தான் இதுகுறித்து தெரிய வரும் என்றார்.

இதனிடையே குண்டு வெடித்த இடத்தில் இருந்த சிலர் இது குறித்துக் கூறுகையில், மர்ம நபர்கள் சிலர் வந்து பஸ்களில் நாட்டு வெடிகுண்டுகளை வீசிச் சென்றனர் என்று தெரிவித்துள்ளனர்.

ALSO READ:  சபரிமலையில் நிறை புத்தரிசி பூஜை: கொட்டும் மழையில் குவிந்த பக்தர்கள்!

மதுரையில் அண்மைக் காலங்களில் ரவுடி கும்பல்களுக்கிடையே மோதல்கள் நடைபெறுவது வழக்கமாகி வருகிறது. சில மாதங்களுக்கு முன்பு கூட வரிச்சியூர் செல்வம் கும்பல் இன்னொரு பிரபல ரவுடி மீது தாக்குதல் நடத்த நாட்டு வெடிகுண்டுகளை டிபன் பாக்ஸில் போட்டு பதுக்கி வைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டு மீட்கப்பட்டது. மதுரையில்  ஓடும் பேருந்தில் இது போன்று டிபன் பாக்ஸ் குண்டுகள் எடுக்கப்பட்டுள்ளன. இந்த நிலையில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த பேருந்துகளில் வெடிச்சத்தம் கேட்டிருப்பது மதுரையில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Trending