ஆந்திர மாநிலம் பிரகாசம் மாவட்டத்தில் உள்ள சிறிய கிராமம் போகுரு. இங்கு வசிக்கும் மகேந்திரா – ஆதிலட்சுமி தம்பதியின் இளைய மகன் மனுசாகர். 4 வயது சிறுவனான இவன் அங்கன்வாடி பள்ளியில் படித்து வந்தான்.

சம்பவத்தன்று அங்கன்வாடிக்கு சென்றவன் வீடு திரும்பவில்லை. இதையடுத்து பெற்றோர் அங்கன்வாடி சென்று விசாரித்தனர். அவன் ஏற்கனவே வீட்டுக்கு சென்று விட்டான் என்று தெரிவித்தனர். ஆனால் வீட்டில் இல்லாததால் சிறுவனை தேடினார்கள்.

அப்போது அதே ஊரைச் சேர்ந்த மந்திரவாதி திருமலா ராவ் (35) மீது சந்தேகம் ஏற்பட்டது. அவரது வீட்டுக்குச் சென்றபோது வீட்டின் முன் மாயமான சிறுவனின் செருப்பு கிடந்தது. சிறுவன் எங்கே என்று கேட்டபோது முதலில் மந்திரவாதி தனக்கு ஒன்றும் தெரியாது என்றார்.

உடனே பெற்றோர் அதிரடியாக மந்திரவாதி வீட்டிற்குள் புகுந்து பார்த்தபோது அவர்கள் கண்ட காட்சியைப் பார்த்து அதிர்ச்சி அடைந்தனர். பூஜை அறையில் காளியின் படத்தின் முன் சிறுவன் மனுசாகர் தலை துண்டிக்கப்பட்டு ரத்த வெள்ளத்தில் கிடந்தது. உடல் அருகே ரத்ததால் அபிஷேகம் செய்தது போல் காணப்பட்டது.

உடனே பெற்றோர் அலறி துடித்தனர். அங்கு கிராம மக்கள் கூடி விட்டனர். அவர்கள் மந்திரவாதியை பிடித்து தர்ம அடி கொடுத்து விசாரித்தனர். அப்போது சிறுவனை கோடாரியால் தலையை துண்டித்து நரபலி கொடுத்ததை ஒப்புக் கொண்டார். தனக்கு அதிக சக்தி கிடைப்பதற்கும் செல்வம் கொழிக்கவும் சிறுவனை நரபலி கொடுத்தாக தெரிவித்தார்.

ALSO READ:  தேசியக் கொடி ஏற்றி செல்ஃபி… அழைக்கிறார் மோதிஜி!

இதனால் ஆவேசம் அடைந்த கிராம மக்கள் மந்திரவாதியை அங்குள்ள மின்சார கம்பத்தில் கட்டி வைத்து அடித்து உதைத்தனர். இதில் மயங்கி விழுந்த அவரை ஏரிக்கரைக்கு தரதரவென்று இழுத்துச் சென்று தீ வைத்தனர்.இந்த சம்பவம் ஆந்திராவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது

தகவல் கிடைத்ததும் போலீசார் விரைந்து சென்று மந்திரவாதியை மீட்டு ஓங்கோல் ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவரது நிலை கவலைக்கிடமாக உள்ளது. போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகிறார்கள். .

 

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Trending