சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணியுடனான ஐபிஎல் டி20 தொடர் 11வது சீசன் பைனலில், சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் அபாரமாக வென்று 3வது முறையாக கோப்பையை முத்தமிட்டது. வாங்கடே மைதானத்தில் நேற்று இரவு நடந்த இப்போட்டியில், டாசில் வென்ற சூப்பர் கிங்ஸ் கேப்டன் டோனி முதலில் பந்துவீச முடிவு செய்தார். அந்த அணியில் ஹர்பஜன் சிங் நீக்கப்பட்டு கர்ண் ஷர்மாவுக்கு வாய்ப்பு அளிக்கப்பட்டது. ஐதராபாத் அணியில் சாஹா, கலீலுக்கு பதிலாக கோஸ்வாமி, சந்தீப் இடம் பெற்றனர். சன்ரைசர்ஸ் தொடக்க வீரர்களாக கோஸ்வாமி, ஷிகர் தவான் களமிறங்கினர். கோஸ்வாமி 5 ரன் மட்டுமே எடுத்த நிலையில் துரதிர்ஷ்டவசமாக ரன் அவுட்டானார். அடுத்து தவானுடன் கேப்டன் கேன் வில்லியம்சன் இணைந்தார். இருவரும் 2வது விக்கெட்டுக்கு 51 ரன் சேர்த்தனர். தவான் 26 ரன் (25 பந்து, 2 பவுண்டரி, 1 சிக்சர்) விளாசி ஜடேஜா சுழலில் கிளீன் போல்டானார். இதையடுத்து வில்லியம்சுடன் இணைந்த ஷாகிப் அல் ஹசன் அதிரடியில் இறங்க, ஐதராபாத் ஸ்கோர் வேகம் எடுத்தது.
இவர்கள் இருவரும் 3வது விக்கெட்டுக்கு 37 ரன் சேர்த்தனர். அரை சதத்தை நெருங்கிய நிலையில், வில்லியம்சன் 47 ரன் (36 பந்து, 5 பவுண்டரி, 2 சிக்சர்) விளாசி கர்ண் ஷர்மா பந்துவீச்சில் டோனியின் மின்னல் வேக ஸ்டம்பிங்குக்கு விக்கெட்டை பறிகொடுத்தார். ஷாகிப் 23 ரன் (15 பந்து, 2 பவுண்டரி, 1 சிக்சர்) எடுத்து ரெய்னா சுழலில் பிராவோ வசம் பிடிபட்டார். அடுத்ததாக அதிரடி ஆல் ரவுண்டர் பிராத்வெயிட் அல்லது ரஷித் கான் உள்ளே வருவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், பேட்டிங் வரிசையில் மாற்றம் ஏதுமின்றி தீபக் ஹூடா களமிறங்கினார். அவர் 3 ரன் மட்டுமே எடுத்து என்ஜிடி வேகத்தில் ஆட்டமிழந்தார். இதைத் தொடர்ந்து யூசுப் பதான் – கார்லோஸ் பிராத்வெயிட் ஜோடி கடைசி கட்ட ஓவர்களை சந்தித்தது. இருவரும் 17 பந்தில் 34 ரன் சேர்த்தனர். ஷர்துல் தாகூர் வீசிய கடைசி பந்தில் பிராத்வெயிட் (21 ரன், 11 பந்து, 3 சிக்சர்) ராயுடு வசம் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார். சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணி 20 ஓவர் முடிவில் 6 விக்கெட் இழப்புக்கு 178 ரன் குவித்தது.
யூசுப் பதான் 45 ரன்னுடன் (25 பந்து, 4 பவுண்டரி, 2 சிக்சர்) ஆட்டமிழக்காமல் இருந்தார். சென்னை பந்துவீச்சில் என்ஜிடி, தாகூர், கர்ண் ஷர்மா, பிராவோ, ஜடேஜா தலா 1 விக்கெட் வீழ்த்தினர். பிராவோ 4 ஓவரில் 46 ரன் வாரி வழங்கினார். இதையடுத்து, சூப்பர் கிங்ஸ் அணி 20 ஓவரில் 179 ரன் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கியது. ஷேன் வாட்சன், டு பிளெஸ்ஸி இருவரும் துரத்தலை தொடங்கினர். புவனேஷ்வர் குமார் முதல் ஓவரில் ஒரு ரன் கூட விட்டுக்கொடுக்காமல் மெய்டன் ஆக வீசி சன்ரைசர்ஸ் அணிக்கு நம்பிக்கை அளித்தார். சந்தீப் ஷர்மாவும் துல்லியமாகப் பந்துவீசி நெருக்கடி கொடுக்க, சூப்பர் கிங்ஸ் ரன் குவிக்க முடியாமல் திணறியது. டு பிளெஸ்ஸி 10 ரன் எடுத்து (11 பந்து, 1 பவுண்டரி) சந்தீப் ஷர்மா பந்துவீச்சில் அவரிடமே கேட்ச் கொடுத்து வெளியேற, சென்னை அணி 4 ஓவரில் 16 ரன்னுக்கு முதல் விக்கெட்டை இழந்தது. இந்த நிலையில், ஷேன் வாட்சன் – சுரேஷ் ரெய்னா ஜோடி 2வது விக்கெட்டுக்கு ஸ்கோரை உயர்த்த போராடியது. தொடக்கத்தில் சற்று நிதானமாக விளையாடிய வாட்சன், பின்னர் பவுண்டரியும் சிக்சருமாக விளாசித் தள்ளி ஐதராபாத் பந்துவீச்சை சிதறடித்தார்.
ரஷித் கான் மட்டும் துல்லியமாகப் பந்துவீசிய நிலையில்… சந்தீப் ஷர்மா, சித்தார்த் கவுல், ஷாகிப் ஹசன் ஆகியோர் ரன்களை வாரி வழங்கி ஏமாற்றமளித்தனர். வாட்சன் – ரெய்னா ஜோடி 2வது விக்கெட்டுக்கு 117 ரன் சேர்த்தது ,சென்னை அணிக்கு வெற்றி நம்பிக்கையை கொடுத்தது. ரெய்னா 32 ரன் (24 பந்து, 3 பவுண்டரி, 1 சிக்சர்) விளாசி பிராத்வெயிட் பந்துவீச்சில் கோஸ்வாமி வசம் பிடிபட்டார். தொடர்ந்து அதிரடியாக விளையாடிய வாட்சன் நடப்பு தொடரில் தனது 2வது சதத்தை பூர்த்தி செய்து அசத்தினார். சிஎஸ்கே அணி 18.3 ஓவரில் 2 விக்கெட் இழப்புக்கு 181 ரன் எடுத்து அபாரமாக வென்றது. வாட்சன் 117 ரன் (57 பந்து, 11 பவுண்டரி, 8 சிக்சர்), ராயுடு 17 ரன்னுடன் ஆட்டமிழக்காமல் இருந்தனர். ஏற்கனவே 2010, 2011ல் ஐபிஎல் கோப்பையை வென்றிருந்த சிஎஸ்கே அணி, 3வது முறையாக சாம்பியன் பட்டம் வென்று மும்பை அணியின் சாதனையை சமன் செய்தது. வாட்சன் ஆட்ட நாயகன் விருது பெற்றார்.
பரிசு மழை
ஐபிஎல் சாம்பியன் கோப்பையை வென்றதன் மூலம் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, ரூ20 கோடி முதல் பரிசுத் தொகையை தட்டிச் சென்றது. 2ம் இடம் பிடித்த சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணிக்கு ரூ12.5 கோடி பரிசுத் தொகை வழங்கப்பட்டது. 3ம் இடம் பிடித்த கொல்கத்தா நைட் ரைடர்ஸ், 4ம் இடம் பிடித்த ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகளுக்கு தலா ரூ6.4 கோடி வழங்கப்பட்டது.
4 போட்டியிலும் வெற்றி
இந்த சீசனில் சன்ரைசர்ஸ் அணிக்கு எதிராக விளையாடிய 4 போட்டியிலும் சென்னை சூப்பர் கிங்ஸ் வெற்றி பெற்று அசத்தியுள்ளது. லீக் சுற்றில் நடந்த 2 போட்டியிலும், குவாலிபயர்-1 மற்றும் பைனலிலும் சன்ரைசர்சுக்கு எதிராக சென்னை சூப்பர் கிங்ஸ் வெற்றி பெற்றிருப்பது குறிப்பிடத்தக்கது.
ஆரஞ்சு தொப்பி
ஐபிஎல் 11வது சீசனில் அதிக ரன் குவித்த வீரருக்கான ஆரஞ்சு தொப்பியை, சன்ரைசர்ஸ் கேப்டன் கேன் வில்லியம்சன் பெற்றார். அவர் 17 போட்டியில் 735 ரன் (அதிகம் 84, சராசரி 52.50, அரைசதம் 8) குவித்து முதலிடம் பிடித்தார். ரிஷப் பன்ட் (684, டிடி), கே.எல்.ராகுல் (659, கிங்ஸ் லெவன்) அடுத்த இடங்களை பிடித்தனர். விக்கெட் வேட்டைக்கான ஊதா தொப்பி, பஞ்சாப் அணி வேகப் பந்துவீச்சாளர் ஆண்ட்ரூ டை (24 விக்கெட்) வசமானது. சன்ரைசர்ஸ் பவுலர்கள் ரஷித் கான், சித்தார்த் கவுல் தலா 21 விக்கெட் கைப்பற்றி அடுத்த இடங்களை பிடித்தனர்.