தூத்துக்குடி, நெல்லை, குமரி மாவட்ட 10ம் வகுப்பு மாணவர்கள் நாளை முதல் விடைத்தாள் மறுக்கூட்டலுக்கு விண்ணப்பிக்கலாம் என தேர்வு இயக்ககம் தெரிவித்துள்ளது.
10ம் வகுப்பு மாணவர்கள் மற்றும் தனித்தேர்வர்கள் நாளை முதல் மே 31ம் தேதி வரை மறுக்கூட்டலுக்கு விண்ணப்பிக்கலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில், எஸ்.எஸ்.எல்.சி., எனப்படும், 10ம் வகுப்பு பொதுத்தேர்வு, மார்ச், 16ல் துவங்கி, ஏப்., 20ல் முடிந்தது. கடந்த மே 23ம் தேதி பத்தாம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டன. தேர்வு எழுதிய, 10 லட்சம் பேரில், 94.5 சதவீதம் பேர், தேர்ச்சி பெற்றனர்.
இதில் சிவகங்கை மாவட்டம் முதலிடத்தையும், ஈரோடு மாவட்டம் 2ம் இடத்தையும் விருதுநகர் மாவட்டம் 3ம் இடத்தையும் பிடித்தன.
இந்த தேர்வில், தேர்ச்சி பெறாதவர்களுக்கு, ஜூன், 28ல், சிறப்பு தேர்வு நடத்தப்பட உள்ளது.
பத்தாம் வகுப்பு தேர்வில், மறுகூட்டலுக்கு விரும்பும் மாணவர்கள், 24 முதல், 26ம் தேதி வரை விண்ணப்பிக்க அவகாசம் வழங்கப்பட்டது. அதேநேரம், ‘ஸ்டெர்லைட்’ விவகாரத்தால், துாத்துக்குடி, திருநெல்வேலி, கன்னியாகுமரி மாவட்டங்களில், இணையதள சேவை ரத்தானதால், மறுகூட்டலுக்கு வாய்ப்பின்றி திணறினர். இந்நிலையில், மூன்று மாவட்டங்களிலும், இணையதள சேவை இயல்பு நிலைக்கு வந்ததும், கூடுதல் அவகாசம் தரப்படும் என, தேர்வுத் துறை அறிவித்தது குறிப்பிடத்தக்கது.