பிரபல கிரிக்கெட் வீரர் விராட் கோலியை வைத்து, ஒரு விநோத சம்பவம் நடந்திருக்கிறது மகாராஷ்டிரா மாநிலத்தில். பொதுவாக தேர்தலின் போது அரசியல்வாதிகள் பல வாக்குறுதிகளை கொடுப்பார்கள். அதை அவர்கள் நிறைவேற்றுவார்களா? என்பது மிகப்பெரிய கேள்விக்குறி தான். ஆனால் மகாராஷ்டிரா மாநிலத்தில் தேர்தலில் ஜெயிக்கும் முன்பே மக்களை ஏமாற்றி இருக்கிறார் ஒரு நபர். புனே மாவட்டம் ஷீரூரில் நடந்த பஞ்சாயத்து தேர்தலில், ”கன்பத் கெளக்வாட்” என்பவர் போட்டியிட்டிருக்கிறார். அப்பகுதியில் இளைஞர்களின் வாக்கு அதிகம் என்பதால், கிரிக்கெட் வீரர் விராட் கோலியை தனது சார்பாக வாக்கு சேகரிக்க அழைத்து வரப்போவதாக அவர் தெரிவித்திருந்தார்.
இதை தொடர்ந்து ”கன்பத் கெளக்வாட்” விராட்கோலியுடன் எடுத்துக்கொண்ட புகைப்படங்கள், பேனர்கள் ஊரெங்கும் வைக்கப்பட்டிருந்தது. மே25 அன்று விராட் வருவார் என அவர் தெரிவித்திருந்தார். அவர் சொன்னது போலவே விராட்டும் காரில் வந்து இறங்கினார். தூரத்தில் இருந்து அவரை பார்த்த ரசிகர்கள் மகிழ்ச்சியில் துள்ளினர். சிலர் அவரின் அருகில் சென்று செல்ஃபி எடுக்க முயன்றிருக்கின்றனர். அப்போது தான் அவர்களுக்கு தெரிந்தது கன்பத் கெளக்வாட் அழைத்து வந்திருப்பது விராட் கோலி அல்ல. அவரை போலவே தோற்றமுள்ள நபர் என்று. ஆனால் தூரத்தில் நின்று பார்த்த மக்கள் யாரும் இந்த ஏமாற்று வேலையை கடைசி வரை கண்டுபிடிக்கவே இல்லை. எல்லா அரசியல்வாதிகளும் ஓட்டு போட்ட பிறகு தான் ஏமாற்றுவார்கள். இந்த ”கன்பத் கெளக்வாட்” ஓட்டு கேட்கும்போதே இப்படி தகிடுதத்தம் செய்கிறாரே! என அசந்துவிட்டனர் எதிர்கட்சி வேட்பாளர்களும், அப்பகுதி மக்களும்.