சென்னை உயர்நீதிமன்றம் மற்றும் உயர்நீதிமன்ற மதுரை கிளைக்கான கோடை விடுமுறைக்கால நீதிமன்றத்தின் கடைசி அமர்வு இன்றும், நாளையும் கூட உள்ளது.
சென்னை உயர் நீதிமன்றம் மற்றும் உயர்நீதிமன்ற மதுரை கிளைக்கு மே 1-ஆம் தேதி முதல் ஜூன் 3-ஆம் தேதி வரை கோடை விடுமுறைக் காலமாக அறிவிக்கப்பட்டது.
இந்த காலகட்டத்தில் அவசர வழக்குகளை மட்டும் விசாரிக்க நீதிபதிகள் நியமிக்கப்பட்டனர். அதன்படி சென்னை உயர்நீதிமன்றத்தில் மே 3-ஆம் தேதி நீதிபதிகள் வி.பாரதிதாசன், என்.சேஷசாயி, ஜி.ஜெயச்சந்திரன், எஸ்.ராமதிலகம், ஆர்.பொங்கியப்பன் ஆகியோரும் மே 9 மற்றும் மே 10-ஆம் தேதிகளில் நீதிபதிகள் வி.பார்த்திபன், பி.டி.ஆதிகேசவலு, எஸ்.எம்.சுப்ரமணியம், எஸ்.ராமதிலகம், ஆர்.பொங்கியப்பன் ஆகியோரும் வழக்குகளை விசாரித்தனர்.
மே 16 மற்றும் மே 17-ஆம் தேதிகளில் நீதிபதிகள் ஆர்.சுப்பிரமணியன், எம். தண்டபாணி, சி.வி.கார்த்திகேயன், பி.ராஜமாணிக்கம், ஆர்.ஹேமலதா ஆகியோரும் மே 21 மற்றும் மே 24-ஆம் தேதிகளில் நீதிபதிகள் டி.ரவீந்திரன், பி.வேல்முருகன், வி.பவானி சுப்பராயன், பி.ராஜமாணிக்கம், ஆர்.ஹேமலதா ஆகியோரும் வழக்குகளை விசாரித்தனர்.
உயர் நீதிமன்ற மதுரை கிளையில் மே 3-ஆம் தேதி நீதிபதிகள் எஸ்.எஸ்.சுந்தர், ஏ.எம்.பஷீர்அகமது, ஆர்.தாரணி ஆகியோரும், மே 9 மற்றும் மே 10-ஆம் தேதிகளில் நீதிபதிகள் எம்.கோவிந்தராஜ், ஜி.ஆர்.சுவாமிநாதன், ஆர்.தாரணி ஆகியோரும், மே 16 மற்றும் மே 17-ஆம் தேதிகளில் நீதிபதிகள் எம்.சுந்தர், அனிதா சுமந்த், எம்.எஸ்.ரமேஷ் ஆகியோரும் வழக்குகளை விசாரித்தனர். மே 23 மற்றும் 24-ஆம் தேதிகளில் நீதிபதிகள் டி.கிருஷ்ணகுமார், ஆர்.சுரேஷ்குமார், டி.கிருஷ்ணவள்ளி ஆகியோரும் வழக்குகளை விசாரித்தனர்.
கடைசி அமர்வு…கோடை விடுமுறைக்கால கடைசி சிறப்பு அமர்வுக்கான நீதிபதிகளில் சிறு மாற்றம் செய்யப்பட்டது. அதன்படி சென்னை உயர் நீதிமன்றத்தில் எஸ்.பாஸ்கரன், ஆர்.எம்.டி. டீக்காராமன், என்.சதீஷ்குமார், ஏ.டி.ஜெகதீஷ்சந்திரா ஆகியோர் நியமிக்கப்பட்டனர். இதே போன்று உயர் நீதிமன்ற மதுரை கிளைக்கு நீதிபதிகள் எம்.வி.முரளிதரன் மற்றும் டி.கிருஷ்ணவள்ளி ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர். இவர்கள் இன்றும், நாளையும் அவசரமாகத் தாக்கல் செய்யப்படும் வழக்குகளை விசாரிக்க உள்ளனர்.
முக்கிய வழக்குகள்
இந்த கோடை விடுமுறைக்கால நீதிமன்றத்தில் பல்வேறு வழக்குகள் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டன. குறிப்பாக பி.இ. படிப்புக்கு ஆன்லைன் வழியாக விண்ணப்பித்தலை எதிர்த்துத் தொடரப்பட்ட வழக்கு, தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவத்தை எதிர்த்துத் தொடரப்பட்ட வழக்கு, முதுநிலை மருத்துவப் படிப்புக்கு அகில இந்திய ஒதுக்கீட்டில் இடம் கிடைத்தவர்கள் மாநில அரசின் ஒதுக்கீட்டிலும் இடம் கோரி தொடர்ந்த வழக்குகள் குறிப்பிடத்தக்கவை.