இங்கிலாந்து – பாகிஸ்தான் அணிகள் மோதும் 2வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி, லீட்ஸ் ஹெடிங்லி மைதானத்தில் இந்திய நேரப்படி இன்று பிற்பகல் 3.30க்கு தொடங்குகிறது. இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள பாகிஸ்தான் அணி 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடுகிறது. லண்டன் லார்ட்ஸ் மைதானத்தில் நடந்த முதல் டெஸ்டில், பாகிஸ்தான் அணி 9 விக்கெட் வித்தியாசத்தில் அபாரமாக வென்றது. பாகிஸ்தான் வீரர்களின் துல்லியமான பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் திணறிய இங்கிலாந்து முதல் இன்னிங்சில் 184 ரன்னிலும், 2வது இன்னிங்சில் 242 ரன்னிலும் ஆல் அவுட்டானது குறிப்பிடத்தக்கது.
குறிப்பாக, 2 இன்னிங்சிலும் தலா 4 விக்கெட் கைப்பற்றி அசத்திய பாக். வேகம் முகமது அப்பாஸ் ஆட்ட நாயகன் விருது பெற்றார். பாகிஸ்தான் 1-0 என முன்னிலை வகிக்க, 2வது டெஸ்ட் ஹெடிங்லியில் இன்று தொடங்குகிறது. இதில் வென்றால் மட்டுமே தொடரை சமன் செய்ய முடியும் என்பதால், இங்கிலாந்து அணி கடும் நெருக்கடியுடன் களமிறங்குகிறது. அதிரடி ஆல் ரவுண்டர் பென் ஸ்டோக்ஸ் காலில் காயம் அடைந்துள்ளதால் அவர் விளையாடுவது சந்தேகமாகி உள்ளது. இது குறித்து டாஸ் போடுவதற்கு சற்று முன்பாக முடிவு செய்யப்படும் எனத் தெரிகிறது. ஸ்டோக்ஸ் விளையாட முடியாத நிலை ஏற்பட்டால் இளம் வீரர் சாம் கரனுக்கு (19 வயது) வாய்ப்பு கிடைக்கலாம்.