மீண்டும் மதிமுகவில் நாஞ்சில் சம்பத் இணைவதற்கான அறிகுறிகள் தென்படத் துவங்கியுள்ளன. அதற்குக் காரணம், நாஞ்சில் சம்பத் கூறியுள்ள சில புகழுரைகள்.
ஸ்டெர்லைட் ஆலையை மூடியதன் பிதாமகன் கதாநாயகன் வைகோதான் என்று கூறியுள்ள நாஞ்சில் சம்பத், தேவைப்பட்டால் மீண்டும் வைகோவோடு மக்கள் போராட்டங்களில் இணைந்து செயல்பட தயார் என்று அறிவித்துள்ளார்.
நிரந்தரமாக ஸ்டெர்லைட் ஆலை மூடியதும் தூத்துக்குடி மக்கள் வைகோவுக்கு விழா எடுப்பார்கள் என்று நாஞ்சில் சம்பத் கூறுவதில் இருந்து, இப்போதே வைகோ பக்கத்தில் ஒரு துண்டு போட்டு விட்டுக் காத்துக் கிடக்கிறார் நாஞ்சில் சம்பத் என்ற பேச்சுகள் எழத் தொடங்கிவிட்டன.
அதிமுக.,வில் இணைந்து இன்னோவா சம்பத் என்று பேர் வாங்கியவர், பின்னர் அதிமுக., தினகரன் அணி என்று ஒட்டிக் கொண்டிருந்தவரை, ஒரு மாதிரியாகப் பேசி வந்தார். தினகரன் தனிக் கட்சி, தனிக் கொடி என்று தனிப் பயணம் மேற்கொண்ட போது, கட்சிக் கொடியில் அண்ணாவையும், கட்சிப் பெயரில் திராவிடத்தையும் தேடிப் பார்த்துக் களைத்துப் போய், இனி கட்சி அரசியலே வேண்டாம் என்று அரசியல் துறவறம் பூண்டுவிட்ட நாஞ்சில் சம்பத், அதன் பின்னர் இலக்கியக் களனில் புகுந்து, இலக்கிய இளம்பயிர்களை வளர்க்கப் போகிறேன் என்று சபதம் எடுத்தார்.
ஆனால் இப்போது மீண்டும் பழைய குருடி கதவைத் திறடி என்ற பழமொழிக்கேற்ப, தொடக்கத்தில் பேர் கொடுத்த கட்சியில் முடிவுரை எழுதப் புறப்பட்டு விட்டாரோ என்று சந்தேகப் படும் விதமாய் வைகோ குறித்து புகழுரையைக் கிளறி, ஊடக உலகில் அரசியல் புயலைக் கிளப்பி விட்டுள்ளார் நாஞ்சில் சம்பத்!