சென்னையில் 8 மெட்ரோ ரயில் நிலையங்களில் இன்று முதல் 4 நாட்கள் யோகா பயிற்சி முகாம்

சர்வதேச யோகா தினத்தை முன்னிட்டு 8 சென்னை மெட்ரோ ரயில் நிலையங்களில் ரயில் பயணிகளுக்கு யோகா பயிற்றுவிக்கும் யோகா பயிற்சி முகாம் இன்று முதல் வரும் 24 வரை நடைபெற உள்ளது.

பொள்ளாச்சியைச் சேர்ந்த யோகா ஆசிரியர் ஏ.என்.தனசேகர் 40 ஆண்டுகள் யோகா பயிற்சியில் அனுபவம் கொண்டவர். இவர் சென்னை மெட்ரோ ரயில் நிலையங்களில், காலை 6 மணி முதல் 8.30 மணி வரையிலும், மாலை 6 மணி முதல் 8.30 மணி வரையிலும் பயணிகளுக்கு யோகா கற்பிக்க உள்ளார். இந்த யோகா பயிற்சியில் 8 வயது முதல் 80 வயது வரையிலானவர்கள் கலந்துகொண்டு பயிற்சி பெறலாம்.

இதில் காலை நேர யோகா பயிற்சி முகாம், ஆலந்தூர், சைதாப்பேட்டை, வடபழனி, திருமங்கலம் ஆகிய மெட்ரோ ரயில் நிலையங்களில் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. மாலை நேரத்தில் யோகா பயிற்சி முகாம் எழும்பூர், ஏஜி – டிஎம்எஸ், அண்ணா நகர் டவர், ஷெனாய் நகர் ஆகிய மெட்ரோ ரயில் நிலையங்களில் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.