உலக கால்பந்து போட்டியில் மெக்சிகோ வெற்றி பெற்றதை தொடர்ந்து ஒரே நாளில் 16 ரசிகர்கள் சுட்டுக்கொலை

உலக கால்பந்து போட்டியில் தோல்வியடைந்ததால், மர்ம நபர்கள் சிலர் மெக்சிகோ ரசிகர்கள் 16 பேரை சுட்டுக்கொலை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ரஷ்யாவில் கடந்த சனிக்கிழமையன்று உலக கால்பந்து போட்டி நடைபெற்றது. அப்பொழுது தென்கொரிய அணியை 2-1 என்ற கணக்கில் வீழ்த்தி மெக்சிகோ அணி வெற்றிபெற்றது. போட்டியில் வெற்றி பெற்றதையடுத்து மெக்சிகோ ரசிகர்கள் பலரும் வீதிகளில் கூடி உற்சாகமாக கொண்டாடியுள்ளனர். அதேசமயம், டெக்சாஸ் எல்லை பகுதியில் உள்ள ஒரு கார் செட்டில் கால்பந்தாட்ட போட்டியை பார்த்து கொண்டிருந்த 6 பேரை, திடீரென காரில் துப்பாக்கிகளுடன் மர்ம நபர்கள் வந்திறங்கியுள்ளனர்.

அந்த மர்மநபர்கள் 6 பேரையும் சரமாரியாக சுட்டுக்கொலை செய்துவிட்டு தப்பி சென்றுவிட்டதாக போலீஸாருக்கு தகவல் கிடைத்துள்ளது. இச்சம்பவம் நடைபெற்ற ஒரு மணி நேரத்திலேயே மற்றொரு பகுதியில் உள்ள முடிதிருத்தும் கடையில் போட்டியை கண்டுகொண்டிருந்த கடையின் உரிமையாளர்கள் 3 பேர் மற்றும் வாடிக்கையாளர்கள் 2 பேர் என, 5 கால்பந்து ரசிகர்கள் சுட்டுக்கொலை செய்யப்பட்டுள்ளதாகவும் போலீசாருக்கு தகவல் வந்துள்ளது. அதேபோல் மற்றொரு பகுதியில் 4 ரசிகர்களும், நள்ளிரவில் ஒருவரும் சடலமாக மீட்கப்பட்டுள்ளனர். இவ்வாறு ஒரே நாளில் நடந்த 16 கொலை சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கொலை சம்பவத்தில் ஈடுபட்டது இரண்டு நபர்கள் மட்டுமே என்பது முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.