அயர்லாந்து அணியுடனான 2வது டி20 போட்டி: இந்திய அணி அபார வெற்றி

அயர்லாந்து அணியுடனான 2வது டி20 போட்டியில், இந்திய அணி 143 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்தப் போட்டியில் இந்தியாவின் லோகேஷ் ராகுல் அதிரடியாக விளையாடி சதம் அடித்தார்.

டப்ளினில் நேற்று நடைபெற்ற போட்டியில் டாஸ்வென்ற அயர்லாந்து அணி, பந்துவீச்சைத் தேர்வுசெய்தது. இதையடுத்து முதலில் களம் இறங்கிய இந்திய அணி 20 ஓவர்களில் 4 விக்கெட் இழப்பிற்கு 213 ரன்கள் குவித்தது.

தொடர்ந்து ஆடிய அயர்லாந்து வீரர்கள், இந்திய வீரர்களின் பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் திணறினர். அந்த அணி, 12.3 ஓவர்களில் 70 ரன்கள் எடுத்த நிலையில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. சஹால், குல்தீப் ஆகியோர் தலா 3 விக்கெட்டுகளையும், உமேஷ் யாதவ் 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர்.

இதன்மூலம் 2 போட்டிகள் கொண்ட டி-20 தொடரை இந்திய அணி முழுமையாகக் கைப்பற்றியது. முன்னதாக, புதன்கிழமை நடைபெற்ற முதலாவது டி20 போட்டியில் 76 ரன் வித்தியாசத்தில் இந்திய அணி வெற்றி பெற்றது.

நேற்று நடைபெற்ற இரண்டாவது போட்டியில் முன்னணி வீரர்கள் சிலருக்கு ஓய்வு அளிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

அயர்லாந்துடன் டி20 தொடர் முடிந்ததும், பலம் வாய்ந்த இங்கிலாந்து அணிக்கு எதிராக இந்தியா 3 டி20, 3 ஒருநாள் மற்றும் 5 டெஸ்ட் போட்டிகளில் விளையாட உள்ளது.