தீபாவளி விடுமுறைக்கான முன்பதிவு தொடங்கிய இரண்டு நிமிடங்களிலேயே விற்றுத்தீர்த்த ரயில் டிக்கெட்டுகள்

தீபாவளி பண்டிகைக்கு, சென்னையிலிருந்து பிறமாவட்டங்களுக்கு செல்லும் ரயில்களில் முன்பதிவு தொடங்கிய இரண்டு நிமிடங்களிலேயே டிக்கெட்டுகள் அனைத்தும் விற்றுத்தீர்ந்ததால் பயணிகள் ஏமாற்றம் அடைந்தனர்.

தீபாவளி பண்டிகை நவம்பர் 6ம் தேதி செவ்வாய்கிழமை கொண்டாடப்படவுள்ள நிலையில், சனி, ஞாயிறு விடுமுறை என்பதால், பெரும்பாலான பயணிகள் நவம்பர் 2-ம் தேதி வெள்ளிக்கிழமை இரவே சொந்த ஊர் செல்ல திட்டமிட்டிருந்தனர். சென்னையிலிருந்து ரயில்கள் மூலம் பிற மாவட்டங்களுக்கு செல்வோருக்கான டிக்கெட் முன்பதிவு இன்று காலை 8 மணிக்கு தொடங்கியது.

ஆனால் முன்பதிவு தொடங்கிய இரண்டு  நிமிடங்களிலேயே டிக்கெட்டுகள் அனைத்தும் விற்றுத்தீர்ந்ததால், எழும்பூர் மற்றும் சென்ட்ரல் ரயில் நிலைய டிக்கெட் கவுன்டர்களில் காத்துக்கிடந்த பயணிகள் ஏமாற்றமடைந்தனர். எழும்பூரில் இருந்து கிளம்பும் வைகை எக்ஸ்பிரஸ், ராமேஸ்வரம் செல்லும் ரயில்கள் என சிலவற்றில் மட்டுமே டிக்கெட்கள் உள்ளன. இன்னும் இரண்டு மூன்று நாட்களுக்கு தீபாவளிக்கான டிக்கெட் முன்பதிவு நடைபெறும் எனவும் அதிகாரிகள் தெரிவித்தனர்.