மாற்றுத்திறனாளிகள், விதவைகளுக்கான அரசு வேலைவாய்ப்புகள் குறித்த கருத்தரங்கு: கிண்டியில் இன்று நடக்கிறது

மாற்றுத்திறனாளிகள், ஆதரவற்ற விதவைகள் ஆகியோருக்கு மத்திய, மாநில அரசு நிறுவன வேலைவாய்ப்புகளில் வழங்கப்படும் முன்னுரிமை, இட ஒதுக்கீடு தொடர்பான விழிப் புணர்வு கருத்தரங்கு இன்று கிண்டியில் நடைபெற உள்ளது.

இதுதொடர்பாக சென்னை மாவட்ட ஆட்சியர் வெ.அன்புச்செல்வன் நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பில், சென்னை சாந்தோமில் உள்ள மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகம் தற்போது தொழில் நெறி வழிகாட்டும் மையமாக செயல்பட்டு வருகிறது. இதன்மூலம் வேலைவாய்ப்பு, போட்டித் தேர்வுகள் மற்றும் சுய வேலை வாய்ப்பு திறன் பயிற்சி ஆகியவை குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்த தொழில்நெறி விழிப் புணர்வு, திறன் வார விழா நேற்று முதல் 13-ம் தேதி வரை நடைபெறுகிறது.

இந்த விழாவின் ஒரு பகுதியாக இன்று மாற்றுத்திறனாளிகள், ஆதரவற்ற விதவைகள் ஆகியோருக்கு மத்திய, மாநில அரசு நிறுவனங்களில் உள்ள வேலைவாய்ப்புகளில் வழங்கப்படும் முன்னுரிமை, இட ஒதுக்கீடு தொடர்பான விழிப்புணர்வு கருத்தரங்கு கிண்டியில் உள்ள மாற்று திறனாளிகளுக்கான சிறப்பு வேலைவாய்ப்பு அலுவலகத்தில் நடை பெற உள்ளது.

விநாடி வினா போட்டிகள்

பெண்களுக்கான சிறப்பு தொழில்நெறி வழிகாட்டும் விழிப்புணர்வு கருத்தரங்கு ராணிமேரி கல்லூரி, எழும்பூரில் உள்ள மாநில மகளிர் மேல்நிலைப்பள்ளியில் இன்று நடைபெறுகிறது. 10, 11, 12-ம் வகுப்பு மாணவர்கள், கல்லூரி மாணவர்களுக்கு திறன் பயிற்சி குறித்த விநாடி வினா போட்டிகள் வரும் 12-ம் தேதி நடத்தப்பட்டு சிறந்த மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட உள்ளன. எனவே, சென்னை மாவட்டத்தைச் சார்ந்த மாணவர்கள் இந்த வாய்ப்பினை பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.