தமிழ்நாடு பொன்விழா: இன்று மாவட்ட அளவிலான கலைப் போட்டிகள்

தமிழ்நாடு என பெயர் சூட்டியதன் பொன்விழாவையொட்டி கலை பண்பாட்டுத் துறை சார்பில் இன்று நடத்தப்படும் மாவட்ட அளவிலான கலைப் போட்டிகளில் பங்கேற்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழ்நாடு எனப் பெயர் சூட்டப்பட்டு 50 ஆண்டுகள் ஆனதையொட்டி பொன்விழா கொண்டாட தமிழக அரசு முடிவு செய்துள்ளது. கலைப் பண்பாட்டுத் துறை சார்பில் மாவட்ட அளவில் நாட்டுப்புற நடனம், தமிழிசை வாய்ப்பாட்டு, பரதநாட்டியம் ஆகிய கலைகளில் போட்டிகள் நடைபெறும். 15 வயது முதல் 30 வயது வரை உள்ள மாணவ, மாணவியர், தொழில்முறைக் கலைஞர்கள் பங்கேற்கலாம். ஒவ்வொரு போட்டியிலும் வெற்றி பெறுபவர்களுக்கு முதல்பரிசாக தலா ரூ.5 ஆயிரம், 2-ஆம் பரிசு ரூ.3 ஆயிரம், 3-ஆம் பரிசு ரூ.2 ஆயிரம் வழங்கப்படும்.

மாவட்ட அளவில் முதல் 3 இடங்களைப் பெறுபவர்கள் மாநில அளவிலான போட்டிக்குப் பரிந்துரைக்கப்படுவர். மாநில அளவில் முதலிடம் பெறுபவருக்கு ரூ.50 ஆயிரம் ரொக்கம் மற்றும் 4 கிராம் தங்கப் பதக்கம், 2-ஆம் பரிசு ரூ.25 ஆயிரம் ரொக்கம், 4 கிராம் தங்கப்பதக்கம், 3-ஆம் பரிசு ரூ.10 ஆயிரம் ரொக்கம், 4 கிராம் தங்கப் பதக்கம் வழங்கப்படும்.

மதுரை மாவட்ட அளவிலான போட்டிகள் மதுரை மண்டல கலைப் பண்பாட்டு மைய வளாகத்தில் வரும் சனிக்கிழமை (ஜூலை 14) நடைபெறும். போட்டிகளில் பங்கேற்க விரும்புவோர் அன்றைய தினம் காலை 9 மணிக்கு நேரடியாகப் பெயர்களைப் பதிவு செய்து கொண்டு கலைப் போட்டியில் கலந்து கொள்ளலாம்.

இதுதொடர்பான விவரங்களுக்கு 94449-49739, 90036-10073 என்ற எண்களில் தொடர்பு கொள்ளலாம்.