ஆர்.கே.நகரில் நிகழ்ந்த சம்பவத்திற்கு டி.டி.வி.தினகரன் மீது மக்கள் கொண்ட கோபமே காரணம்” என்று மீன் வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.
காஞ்சிபுரம் மாவட்டம் வாணியஞ்சாவடியில் ஜெயலலிதா மீன் வளப் பல்கலை கழகத்தில் இளநிலை மாணவச் சேர்க்கைக்கான கலந்தாய்வை துவக்கி வைத்து பேசிய அமைச்சர் ஜெயக்குமார், ஆர்.கே.நகரில் டி.டி.வி.தினகரனுக்கு எதிராக நடைபெற்ற சம்பவத்திற்கும் அதிமுக-விற்கு எந்த சம்பந்தமும் இல்லை என்றும் அவர், டோக்கன் கொடுத்து ஒரு ஓட்டுக்கு 10, 000 ரூபாய் தருவதாக கூறிவிட்டு மக்களை ஏமாற்றி வஞ்சித்து மோசடியாக வெற்றி பெற்றுள்ளதாகவும் கூறினார்.
ஆர்.கே.நகரில், தினகரன் வருவதற்கு எதிர்ப்பு தெரிவித்து, 400க்கும் மேற்பட்டோர், அங்கு குவிந்தனர். தினகரனுக்கு எதிராக, 20 ரூபாய் நோட்டுகளை காட்டி, கோஷங்கள் எழுப்பினர்; இதனால், கோபமடைந்த தினகரன் அணியினர், அவர்களுடன் மோதலில் ஈடுபட்டனர். இதில், பெண் போலீஸ் இன்ஸ்பெக்டர் உட்பட, ஆறு பேர் படுகாயமடைந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.