சென்னை: முல்லைப் பெரியாறு அணை பாதுகாப்பாக உள்ளது என்றும், நீர் மட்டம் சீராக இருப்பதை தொடர்ந்து கண்காணித்து வருவதாகவும் கேரள முதல்வர் பினராயி விஜயனுக்கு தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கடிதம் எழுதியுள்ளார்.
முன்னதாக, கேரளத்தில் நிலவும் வெள்ளச் சூழலில், முல்லைப் பெரியாறு அணையை 139 அடியாக வைத்திருக்க வேண்டும் என்றும் 142 அடிக்கு உயர்த்த வேண்டாம் என்றும், கூடுதலாக தண்ணீரைத் திறந்து விடுமாறும் தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியை கடிதம் மூலம் கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் கேட்டுக் கொண்டிருந்தார்.
இதற்கு கடிதம் மூலம் பதிலளித்துள்ள தமிழக முதலமைச்சர், முல்லைப் பெரியாறு அணை பாதுகாப்பாக உள்ளதாகவும், நீர்மட்டம் 142 அடிக்கு மிகாமல் தொடர்ந்து கண்காணிப்பதால் அணையின் பாதுகாப்பிற்கு அச்சுறுத்தல் இல்லை எனவும் கூறியுள்ளார்.
மேலும் முல்லைப் பெரியாறு அணையிலிருந்து வைகை அணைக்கு முடிந்தவரை அதிக பட்ச தண்ணீர் கொண்டு செல்லப்படுவதாகவும், நீர் பிடிப்பு பகுதிகளில் மழை அளவை கண்காணிக்க போதிய ஒத்துழைப்பை தமிழக அதிகாரிகளுக்கு கேரள அதிகாரிகள் வழங்க வேண்டும் எனவும் கோரியுள்ளார்.