தமிழகத்தில் பெய்துவரும் வடகிழக்கு பருவமழையால் சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்தது.

குறிப்பாக கடந்த 14 ஆம் தேதி இரவு முதல் 2 நாட்களாக பெய்த தொடர் மழையால் பல இடங்களில் தண்ணீர் தேங்கி பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை மிகவும் பாதிக்கப்பட்டது.

இந்த நிலையில் பல்வேறு ஜோதிடர்கள் கடந்த சில தினங்களாக வருகிற 21 ஆம் தேதி (சனிக்கிழமை) முதல் ஒரு வாரம் கனமழை பெய்யும் என்றும், 22 ஆம் தேதி (ஞாயிற்றுக்கிழமை), புயல் பலமாக சென்னையை உலுக்கும் என்றும் வாக்கிய முறை பஞ்சாங்கத்தில் குறிப்பிடப்பட்டுள்ளதாக வெளியிட்டு வருகிறார்கள். இந்த தகவல் வேகமாக வாட்ஸ்-அப்பில் பரவி வருகிறது.

மேலும் நாசா விண்வெளி மையமும், இதேபோல் வருகிற 21, 22 ஆம் தேதிகளில் சென்னையில் பலத்த மழை பெய்யும் என்றும், இதுவரை இல்லாத அளவில் 250 செ.மீ. மழை பெய்யும் என்றும் தெரிவித்துள்ளதாகவும் வாட்ஸ்ஆப்பில் வைரலாக பரவி வருகிறது.

கடந்த ஒரு வாரத்தில் பெய்த கனமழையில் இருந்தே மீள முடியாமல் தவிக்கும் சென்னை மற்றும் அதனை சுற்றி உள்ள பகுதியை சேர்ந்த மக்களிடம் இந்த தகவல்கள் ஒரு விதமான பீதியை ஏற்படுத்தியுள்ளது.

ALSO READ:  விதிமீறல் பட்டாசு ஆலைகளின் உரிமங்களை ரத்து செய்து போலீஸார் நடவடிக்கை!

இதுகுறித்து சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் ரமணன் செய்தியாளர்களிடம்கூறியதாவது :_

உலக வானிலை வழிகாட்டுதல் படி, செயற்கைக்கோள் தரும் தகவல்களை கொண்டு தான் அவ்வப்போது மழை வருமா? வராதா? என்பதை தெரிவிக்கிறேன். தற்போது வடகிழக்கு பருவமழை காலம். பொதுவாக வடகிழக்கு பருவமழை காலங்களில் தமிழகம் எப்போதுமே மழை பொழிவை பெறும். அந்த வகையில் தற்போது மழை பெய்துள்ளது. இனியும் மழை வரும்.

ஆனால் வாக்கிய முறை பஞ்சாங்கம், நாசா குறிப்பிடுவது போல் பலத்த மழை வருமா? என்பது குறித்து எனக்கு தெரியாது. வானிலை தகவல்படி, அடுத்தகட்டமாக பலத்த மழையோ, எந்த ஒரு புதிய நிகழ்வோ (புயல்) இல்லை. வாட்ஸ்-அப்பில் வரும் தகவல்கள் பற்றியும் எனக்கு எதுவும் தெரியாது.

தெற்கு ஆந்திரா வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டியுள்ள பகுதியில் நேற்று (நேற்று முன்தினம்) நிலைகொண்டிருந்த தீவிர காற்றழுத்த தாழ்வு பகுதி, வலு குறைந்து, காற்றழுத்த தாழ்வு பகுதியாக மாறி அதே பகுதியில் நீடிக்கிறது.

ALSO READ:  வருமானத்தில் கலக்கும் வந்தேபாரத் ரயில்கள்! தென் மாநிலங்களில் அதிக வரவேற்பு!

மேலும், தமிழ்நாட்டின் உள்மாவட்டங்களில் ஒரு மேலடுக்கு சுழற்சி நிலைக்கொண்டுள்ளது. இந்த காரணங்களால், அடுத்த 24 மணி நேரத்தில் (இன்று), தமிழகம் மற்றும் புதுச்சேரியில் அநேக இடங்களிலும், ஓரிரு இடங்களில் கனமழையும் பெய்யும்.

புயல் போன்ற நிகழ்வுகள் எதுவும் வரும் நாட்களில் இல்லை. அப்படியே இருந்தாலும், அது நிலநடுக்க கோட்டுக்கு அருகில் இந்திய பெருங்கடல் பகுதியில் தான் நிலவும் என்றார்.

பொதுமக்கள் வானிலை குறித்து தெரிய வேண்டும் என்றால், வானிலை ஆய்வு மைய இணையதளத்துக்கு சென்று பார்க்கலாம். அதில், அடுத்த 5 நாட்களுக்கான வானிலை குறித்து குறிப்பிடப்பட்டிருக்கும்.

அப்படி இல்லையென்றால், வானிலை ஆய்வு மையத்துக்கு தொலைபேசியில் தொடர்பு கொண்டு அதிகாரிகளிடம் கேட்டு தெரிந்து கொள்ளலாம் என்று சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் ரமணன் செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளார்.

 

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Trending