நடிகையுடன் செல்பி எடுத்த முதலமைச்சர் : காங்கிரஸ் கண்டனம்

பிரபல நடிகையான கரீனா கபூர் யூனிசெப்அமைப்பின் கவுரவ தூதராக நியமிக்கப்பட்டுள்ளார்.

நேற்று யூனிசெப் அமைப்பு சார்பில் சத்தீஷ்கர் மாநில தலைநகர் ராயப்பூரில் குழந்தைகளுக்கான நிகழ்ச்சி ஒன்று நடந்தது. இதில் மாநில முதலமைச்சர் ராமன்சிங் (பா.ஜனதா), நடிகை கரீனா கபூர் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டனர். விழா மேடையில் இருவரும் அருகருகே அமர்ந்து இருந்தனர்.

அப்போது முதலமைச்சர் ராமன்சிங் தனது செல்போனில் கரீனாவுடன் சேர்ந்து செல்பி எடுத்துக் கொண்டார். உடனே கூட்டத் தினர் கரகோஷம் எழுப்பினர்.பின்னர் நிகழ்ச்சியில் பங்கேற்ற மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களையும் முதல்-மந்திரி ராமன்சிங் தனது செல்போனில் படம் எடுத்தார்.

ராமன்சிங் கரீனாவுடன் செல்பி எடுத்துக் கொண்ட காட்சி உள்ளூர் தொலைக் காட்சிகளில் ஒளிபரப்பானது. இதைப்பார்த்த மாநில காங்கிரஸ் தலைவர் புபேஷ் பகேல் முதலமைச்சர் ராமன் சிங்குக்கு கண்டனம் தெரிவித்துள்ளார்.

காங்கிரசின் குற்றச்சாட்டு பற்றி அதிகாரி ஒருவர் கூறுகையில், முதலமைச்சர் செல்பி எடுக்கவில்லை. நிகழ்ச்சியில் பங்கேற்ற மாணவர்களைத்தான் படம் பிடித்தார். அதை செல்பி எடுத்ததாக கூறுவது தவறு. முதலமைச்சர் தான் பங்கேற்கும் நிகழ்ச்சியில் இதுபோல் படம் எடுப்பது வழக்கம் என்றார்.ஆனால் காங்கிரஸ் தரப்பில் கூறும்போது, முதலமைச்சர் செல்பி எடுப்பது டி.வி.க்களில் ஒளிபரப்பாகியுள்ளது. நாங்கள் நிரூபிக்க வேண்டிய அவசியம் இல்லை என்று கூறினர் .