ரூ.1½ கோடி மதிப்புள்ள கைக்கடிகாரங்களை சென்னை ராயப்பேட்டையில் கடிகாரக்கடையை உடைத்து மர்மநபர்கள் இருவர் துணிகரமாக கொள்ளையடித்து சென்றுள்ளனர்.

ராயப்பேட்டை ராதாகிருஷ்ணன் சாலையில் ‘ரிஸ்ட் வேல்டு’ என்ற பெயரில் பிரபல கைக்கடிகாரக்கடை உள்ளது. இங்கு ரேடோ உள்பட விலை உயர்ந்த கைக்கடிகாரங்கள் விற்பனை செய்யப்பட்டது. இந்த கடையின் உரிமையாளர் வினோத் நேற்று முன்தினம் இரவு வழக்கம்போல கடையை பூட்டி விட்டு சென்றார்.

நேற்று காலை 10.30 மணிக்கு கடையை திறக்க வந்தார். அப்போது கடையின் ஷட்டர் கதவு உடைக்கப்பட்டு திறந்து கிடந்தது. கடைக்குள் கொள்ளையர்கள் புகுந்திருப்பது தெரியவந்தது.

கடைக்குள் இருந்த விலை உயர்ந்த 150 கைக்கடிகாரங்கள் திருட்டு போயிருப்பது தெரியவந்தது. திருட்டு போன கைக்கடிகாரங்கள் ரூ.40 ஆயிரத்திலிருந்து ரூ.1½ லட்சம் வரை விலையுள்ள கடிகாரங்களாகும்.கொள்ளை போன கைக்கெடிகாரங்களின் மதிப்பு ரூ.1½ கோடி இருக்கும் என கருதப்படுகிறது.

கடையின் கல்லாபெட்டியில் இருந்த ரூ.1 லட்சம் ரொக்க பணத்தையும், கொள்ளையர்கள் திருடிச்சென்றுவிட்டனர். இந்த சம்பவம் பற்றி கடைக்காரர் வினோத், ராயப்பேட்டை காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார். இணை ஆணையாளர் மனோகரன், துணை ஆணையாளர் பாலகிருஷ்ணன் ஆகியோர் திருட்டு நடந்த கைக்கடிகார கடைக்கு நேரில் சென்று விசாரணை நடத்தினார்கள்.

கடையில் பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கேமராவில் கொள்ளையர்கள் இருவரின் உருவம் பதிவாகியிருந்தது. கொள்ளையர்கள் கைக்கடிகாரங்களை ஒரு பையில் அள்ளிப்போட்டு மூட்டை கட்டிக்கொண்டு எடுத்துச்செல்லும் காட்சியும் கேமராவில் காணப்பட்டது.

கொள்ளையர்கள் இருவரும் வடமாநிலத்தை சேர்ந்தவர்களாக இருக்கலாம் என்று கருதப்படுகிறது. கொள்ளையர்களை பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது. இந்த கொள்ளை சம்பவம் தொடர்பாக ராயப்பேட்டைகாவல் நிலையத்தினர் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

ALSO READ:  ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயில் ஆடிப்பூர உத்ஸவ நான்காம் நாளில்..!

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Trending