தமிழர்கள் மீது என்கவுன்டர்: உரிய நடவடிக்கை எடுக்க அதிமுக எம்.பி. மக்களவையில் வலியுறுத்தல்

புது தில்லி: ஆந்திராவில் தமிழர்களை என்கவுன்ட்டரில் சுட்டுக் கொன்றவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மக்களவையில் அதிமுக எம்.பி. வலியுறுத்தினார். திருப்பதி துப்பாக்கிச் சூடு குறித்து மக்களவையில் பேசிய அதிமுக எம்.பி. வேணுகோபால், இந்தச் சம்பவத்தில் உண்மை என்ன என்று கண்டறிய வேண்டும் என வலியுறுத்தினார். மக்களவையில் இதுகுறித்து ஒத்திவைப்பு தீர்மானம் கொண்டு வந்து விவாதிக்க அனுமதி கோரி வேணுகோபால் நோட்டீஸ் அளித்தார். ஆனால், பிரச்னை மாநில அரசு சம்பந்தப்பட்டது எனக் கூறி ஒத்திவைப்புத் தீர்மானத்தை ஏற்க அவைத்தலைவர் சுமித்ரா மகாஜன் அனுமதிக்க மறுத்துவிட்டார். இருந்தபோதும், இந்தப் பிரச்னை குறித்து அவையில் பேச அவர் அனுமதி அளித்தார். இதனைத் தொடர்ந்து அவையில் பேசிய வேணுகோபால், “ஆந்திர மாநிலம் சேஷாலம் வனப்பகுதியில் செம்மரக் கடத்தலில் ஈடுபட்டதாக என்கவுன்ட்டரில் தமிழக தொழிலாளர்கள் 20 பேர் கொல்லப்பட்டனர். ஆந்திராவில் சுட்டுக் கொல்லப்பட்ட தமிழர்கள் மீது வெட்டுக்காயங்களும் உள்ளன. ஆந்திர துப்பாக்கிச் சூடு குறித்த உண்மை வெளிக்கொண்டு வரப்பட வேண்டும். என்கவுன்ட்டரில் ஈடுபட்டவர்கள் தண்டிக்கப்பட வேண்டும். உயிரிழந்தவர்கள் குடும்பங்களுக்கு நிதி கிடைக்க மத்திய அரசு வழிவகை செய்தார்” என்றார்.