வேறு மாநிலத்தில் கைது செய்யும்போது போலீஸாருக்கான விதிமுறைகள் வகுக்க உத்தரவிடக் கோரி மனு

சென்னை: போலீஸார், ஒரு மாநிலத்திலிருந்து வேறு மாநிலத்துக்குச் சென்று கைது செய்யும்போது அவர்கள் பின்பற்ற வேண்டிய விதிமுறைகளை வகுக்குமாறு மத்திய அரசுக்கு உத்தரவிடக் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் பொது நல மனு ஒன்று தாக்கல் செய்யப்பட்டுள்ளது. சென்னை, வியாசர்பாடி, சாஸ்திரி நகரைச் சேர்ந்த எஸ்.தங்கம் என்பவர் உயர் நீதிமன்றத்தில் பொது நல மனு ஒன்றைத் தாக்கல் செய்தார். அதில், ஆந்திர மாநிலம், ரேணிகுண்டா போலீஸார் கடந்த ஜனவரி 24-ஆம் தேதி எனது சகோதரர் ரவியை கைது செய்தனர். மூன்று நாள்கள் சட்ட விரோதக் காவலில் வைத்து பிறகு, 27-ஆம் தேதி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். இதேபோன்று முகமது ரபி என்பவரை தமிழகத்திலிருந்து கைது செய்து சென்ற ஆந்திர போலீஸார் அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தவில்லை. இதேபோன்று தமிழகத்தைச் சேர்ந்தவர்கள் மீது, ஏராளமான பொய் வழக்குகளைப் பதிவு செய்து ஆந்திர போலீஸார் கைது செய்கின்றனர். மேலும், எந்தத் தகவலும் தெரிவிக்காமல், நினைத்தவர்களைக் கைது செய்து அழைத்துச் செல்கின்றனர். தமிழகத்தைச் சேர்ந்தவர்கள் மீது பொய் வழக்குகளைப் பதிவு செய்து, எத்தனை நபர்களை ஆந்திர போலீஸார் சட்டவிரோதமாக கைது செய்துள்ளனர் என விசாரணை செய்து அறிக்கை தாக்கல் செய்ய தமிழக அரசுக்கு உத்தரவிட வேண்டும். தமிழக போலீஸாரிடம் தகவல் தெரிவிக்காமல் தமிழகத்தைச் சேர்ந்தவர்களைக் கைது செய்ய ஆந்திர போலீஸாருக்கு தடை விதிக்க வேண்டும். வேறு மாநிலத்துக்குச் சென்று யாரையாவது கைது செய்யும்போது போலீஸார் பின்பற்ற வேண்டிய விதிமுறைகளை உருவாக்குமாறு மத்திய அரசுக்கு உத்தரவிட வேண்டும் இவ்வாறு அந்த மனுவில் கோரப்பட்டது. இந்த மனு, தலைமை நீதிபதி எஸ்.கே.கெளல், நீதிபதி டி.எஸ்.சிவஞானம் ஆகியோர் அடங்கிய முதன்மை அமர்வு முன்பு திங்கள்கிழமை நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரர் தரப்பில் ஆஜரான வழக்குரைஞர், இதேபோன்ற ஒரு வழக்கு உச்ச நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது. அதனால், இந்த வழக்கை இங்கு நடத்துவதா அல்லது உச்ச நீதிமன்றத்துக்கு மாற்றுவதா என்பது குறித்து தெரிவிக்க அவகாசம் வேண்டும் என்று கோரினார். இதையடுத்து ஜூன் 3-ஆம் தேதிக்கு இந்த வழக்கு ஒத்தி வைக்கப்பட்டது.