சுஷ்மா ஸ்வராஜுடன் தமிழக மீனவர்கள் ஏப்.27ல் சந்திப்பு

ராமநாதபுரம்: மத்திய அமைச்சர் சுஷ்மா சுவராஜை சந்தித்து மீனவர் பிரச்னைக்கு தீர்வு காண, தமிழக மீனவப் பிரதிநிதிகள் திட்டமிட்டுள்ளனர். வரும் ஏப்.27ஆம் தேதி இந்த சந்திப்பு தில்லியில் நடக்கிறது. பேச்சுவார்த்தைக்காக பல்வேறு நடவடிக்கைகள் எடுத்தும், தமிழக–இலங்கை மீனவர்கள் சந்திப்பில் பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்தது. மேலும், இலங்கை கடற்படையினரின் அத்துமீறல்கள் தொடர்ந்து வருகிறது. எனவே இந்தப் பிரச்னைக்கு நிரந்தரத் தீர்வு காண மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜை சந்திக்க தமிழக மீனவ பிரதிநிதிகள் திட்டமிட்டுள்ளனர். தற்போது மீன்படி தடைக்காலம் என்பதால் விசைப்படகுகள் கடலுக்கு செல்லவில்லை. இந்தக் காலத்தில் விரைவில் நல்ல முடிவு எடுக்கப்பட்டால் தடைக்காலம் முடிந்ததும் மகிழ்ச்சியுடன் மீன்பிடிக்க செல்லலாம் என மீனவர்கள் எதிர்பார்க்கின்றனர். இதன் அடிப்படையில் தமிழக பாஜக., நிர்வாகிகள் மேற்கொண்ட முயற்சியின் காரணமாக 27–ஆம் தேதி சுஷ்மா ஸ்வராஜை சந்திக்க அனுமதி கிடைத்துள்ளது. இதற்காக தமிழக மீனவப் பிரதிநிதிகள் 150 பேர் தில்லிக்குச் செல்கின்றனர். ராமேஸ்வரத்தில் இருந்து மீனவர் சங்க தலைவர்கள் தேவதாஸ், சேசு, அல்போன்ஸ், மகத்துவம் உள்பட 26 பேர் கொண்ட குழு வெள்ளிக்கிழமை இன்று இரவு ராமேசுவரத்தில் இருந்து ரயிலில் புறப்பட்டு சென்னை சென்று, மற்ற மீனவர்கள் குழுவுடன் இணைந்து தில்லி செல்கிறது.