“உன் பாட்டி எப்படி செத்துப்போனாள்? தெரியுமோ?”

13606606_1279763892041220_5583996890754994650_n

“உன் பாட்டி எப்படி செத்துப்போனாள்?
தெரியுமோ?”

(அந்த ரகசியம் பெரியவாளுக்கு
எப்படித் தெரிந்தது?.அது பரம ரகசியம்!)


சொன்னவர்-ஸ்ரீமடம் பாலு.
தொகுத்தவர்-டி.எஸ்.கோதண்டராம சர்மா.

 தட்டச்சு-வரகூரான் நாராயணன்.

நடுத்தர வயது தம்பதிகள் தரிசனத்துக்கு
வந்தார்கள். முகத்தில் ஏக்கம் தெரிந்தது.

“கல்யாணமாகி பத்து வருஷமாச்சு…

சந்ததி இல்லை..”

‘மேலே சொல்லு’ என்று கேட்கிறமாதிரி
பெரியவாள் பார்த்தார்கள்.

 
“ராமேஸ்வரத்தில் நாகப் பிரதிஷ்டை..
பண்ணினேன். சந்தானகோபால மந்திரம்
ஆயிரக்கணக்காகப் பண்ணினேன்…”

பெரியவாள் கண்களை மூடிக்கொண்டு
மௌனமாக இருந்தார்கள்.

“உன் பாட்டி எப்படி செத்துப்போனாள்?
தெரியுமோ?”

வந்தவருக்கு, சாட்டையால் அடித்தாற்போல்
இருந்தது. ‘இத்தனை பேர்கள் எதிரில், அதை
எப்படிச் சொல்வது?’

பெரியவாள் சொன்னார்கள்.

“உன் தாத்தா ரொம்ப முன்கோபி.சதா காலமும்
பாட்டியைத் திட்டுவார்.அடிப்பார். அவர்
அட்டகாசம் பொறுக்கலே. ஒருநாள் உன் பாட்டி
கொல்லைக் கிணத்திலே விழுந்து தற்கொலை
பண்ணிண்டுட்டா…”

“உன் குடும்பத்துக்கு ஸ்திரீ சாபம் இருக்கு. நல்ல
ஜோஸ்யர் – உபாசகர்களிடம் கேட்டு பரிஹாரம் செய்.
அப்புறம் புத்திரப் பிராப்தி உண்டாகும்…”

தம்பதிகள் நெகிழ்ந்தே போனார்கள்.

பாட்டி கிணற்றில் விழுந்தது அந்த பையனுக்கு
தெரியும். (அவன் மனைவிக்குக்கூட அதுவரை
சொன்னதில்லை!) அந்த ரகசியம் பெரியவாளுக்கு
எப்படித் தெரிந்தது?.

அது பரம ரகசியம்!