நமது பாரம்பரிய கலைகளை இளைய தலைமுறையினரிடம் கொண்டு செல்லும் வகையில், சென்னை மாநகராட்சி சார்பில் இன்று அண்ணா நகர் டவர் பூங்காவில் இசை நிகழ்ச்சி நடைபெற உள்ளது.
ஐ.நா.வின் யுனெஸ்கோ அமைப்பு சமூக, பொருளாதாரம், கலாசாரம் மற்றும் சுற்றுச்சூழல், கலை ஆகியவற்றில் பாரம்பரியத்தைக் கொண்ட நகரங்களை சர்வதேச ஒத்துழைப்புடன் வலுப்படுத்தும் நோக்கில், கடந்த 2004-இல் படைப்பாற்றல் திறன் கொண்ட நகரங்களுக்கான ஒருங்கிணைப்பு அமைப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்த அமைப்பில் தற்போது 180 நகரங்கள் உள்ளன. இதில், இந்தியாவில் வாராணசி, ஜெய்ப்பூர் நகரங்களுக்கு அடுத்து மூன்றாவது இடத்தில் சென்னை உள்ளது.
இதுகுறித்து மாநகராட்சி அதிகாரிகள் கூறுகையில், “இசைத் துறையில் சென்னையின் பங்களிப்பு காரணமாக கடந்த 2017-ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் சென்னையை பாரம்பரிய இசை நகரமாக யுனெஸ்கோ தேர்ந்தெடுத்தது. இதுவரை உலக அளவில் 31 நகரங்களை இசை நகரங்களாக யுனெஸ்கோ அறிவித்துள்ளது.
இதைத் தொடர்ந்து, தமிழகத்தின் பாரம்பரிய இசையை இளையதலைமுறையினரிடம் கொண்டு செல்லும் வகையிலும், நமது கலைகளை சர்வதேச அளவில் அறியப்படுத்தும் வகையிலும் சென்னையில் இசை நிகழ்ச்சிகள் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.
இதன் முதல் கட்டமாக, சென்னை மாநகராட்சிக்கு உள்பட்ட பகுதிகளிலுள்ள பூங்காக்கள், பொது இடங்களில் கலை நிகழ்ச்சிகள் நடத்திட திட்டமிடப்பட்டுள்ளது. அதன்படி, இன்று மாலை 5 மணி அளவில் அண்ணா நகர் டவர் பூங்காவில் கலை நிகழ்ச்சிகள் நடைபெறவுள்ளன. இதைத் தொடர்ந்து அனைத்து பகுதிகளிலும் பாரம்பரிய இசை நிகழ்ச்சிகள் நடத்தப்பட உள்ளது.