இந்திய கிரிக்கெட் அணி வெஸ்ட் இண்டீசில் சுற்றுப்பயணம் செய்து 3 ஒரு நாள் போட்டி, மூன்று 20 ஓவர் ஆட்டம் மற்றும் 2 டெஸ்டில் விளையாடுகிறது.
ஆகஸ்டு 3-ந்தேதி முதல் செப்டம்பர் 3-ந்தேதி வரை இந்திய அணி வெஸ்ட் இண்டீசுடன் விளையாடுகிறது.
வெஸ்ட்இண்டீஸ் தொடருக்கான இந்திய அணி தேர்வு இன்று நடக்கிறது. எம்.எஸ்.கே.பிரசாத் தலைமையிலான தேர்வு குழு மும்பையில் கூடி வீரர்களை அறிவிக்கிறார்கள்.
முன்னதாக வீரர்கள் தேர்வு வீரர்கள் உடல் தகுதி குறித்த நிலை வருவதில் தாமதம் ஏற்பட்டதால் தேர்வு தள்ளி வைக்கப்பட்டது.
இந்திய அணியின் முன்னாள் கேப்டன் தோனி உலக கோப்பையுடன் ஓய்வு பெறுவார் என்று எதிர் பார்க்கப்பட்டது. ஆனால், அவர் ஓய்வு முடிவை காலம் தாழ்த்தி வருகிறார். அடுத்த ஆண்டு நடைபெறும் 20 ஓவர் உலக கோப்பையுடன் அவர் ஓய்வை அறிவிக்கலாம் என்று திட்டமிட்டு இருக்கிறார்.
ஆனாலும் கிரிக்கெட் வாரியம் அவராக ஓய்வு பெற வேண்டும் என்று விரும்புகிறது. இதுதொடர்பாக தேர்வு குழுவினர் அவரிடம் பேசி வருகிறார்கள். ஆனால் அவர் இதுகுறித்து வெளிப்படையாக எதுவும் தெரிவிக்கவில்லை.
வெஸ்ட்இண்டீஸ் தொடருக்கான அணியில் தோனி ஆட மாட்டார் என்று தெரிகிறது. ஒருவேளை அவர் அணியில் இடம் பெற்றாலும் 11 பேர் கொண்ட அணியில் இருக்கமாட்டார். அணியின் விக்கெட் கீப்பராக ரிசப் பண்ட் தேர்வு செய்யப்படுவார். ஏற்கனவே தோனியை 20 ஓவர் அணியில் இருந்து தேர்வு குழு நீக்கி இருந்தது. இதனால் அவர் நீக்கப்பட்டாலும் ஆச்சரியப்படுவதற்கு இல்லை.
முன்னாள் வீரர்களான காம்பீர், ஷேவாக் ஆகியோர் தோனி ஓய்வு பெற இதுவே சரியான தருணம் என்று கருத்து தெரிவித்துள்ளனர்.
வெஸ்ட்இண்டீஸ் டெஸ்ட் தொடருக்கு புதிய தொடக்க வீரர் தேர்வு செய்யப்படலாம். தவான் காயம் அடைந்திருப்பதால் புதிய தொடக்க வீரருக்கு வாய்ப்பு இருப்பதாக கருதப்படுகிறது.