விநாயக சதுர்த்தி: பூஜையின் முதலில் ஏன் கணபதியை வழிபட வேண்டும்?

ஆன்மிகக் கட்டுரைகள் லைஃப் ஸ்டைல் விழாக்கள் விசேஷங்கள்
vinayakar-pooja
vinayakar-pooja

விநாயக சதுர்த்தி ஸ்பெஷல். ஆன்மீக கேள்வி பதில்:

கேள்வி: ஒவ்வொரு பூஜையையும் தொடங்கும் முன்பாக கணபதியை ஏன் வழிபட வேண்டும்?

பதில்: எந்த பணியைத் தொடங்கினாலும் அது தடங்கலின்றி முழுமையடைய வேண்டும் என்று அனைவரும் விரும்புகிறோம். அப்படிப்பட்ட தடைகளை விலக்கும் கடவுள் கணபதி. ஒரு வேலையில் ஈடுபடும்போது சங்கல்பம் முதல் முடிவு வரை பல பொருட்களின் தேவை நமக்கு இருக்கும்.

தேவைப்படும் பொருட்கள் மட்டுமின்றி அந்த வேலையைச் செய்து முடிப்பதற்கான அறிவு, திறமை, மந்திரம் போன்றவையும் பூஜைக்கான முக்கிய அங்கங்கள். அதாவது பகுதிகள். இந்த அங்கங்கள் அனைத்தையும் ஒன்று சேர்த்தால் அதனை ‘கணம்’ என்பார்கள்.

கணங்களின் மேல் அதிகாரம் உள்ள கடவுள் கணபதி. கணங்கள் அனைத்தும் நமக்கு உதவிகரமாக, அனுகூலமாக இருக்க வேண்டும். பிரதிகூலமாக மாறக்கூடாது. காரியசித்தி ஏற்பட வேண்டும் என்ற எண்ணத்தால் கணபதியை முதலில் வழிபட்டு விக்னங்களை நீக்க வேண்டும் என்று பிரார்த்தனை செய்கிறோம்.

படைப்பிற்கு முன்பு பிரம்மதேவர் சிருஷ்டியைத் தொடங்க வேண்டும் என்று சங்கல்பித்த உடனே அந்தச் செயலுக்கு பல தடைகள் ஏற்பட்டன. அப்போது பிரம்ம தேவர் ஓம்காரத்தை தியானம் செய்தார். ஓம்காரம் கஜவதன வடிவில் தோற்றமளித்து படைப்புச் செயல்களுக்கு ஏற்பட்ட தடைகளை நீக்கியது.

சிருஷ்டி செயலுக்கு ஏற்பட்ட தடைகளை ஓங்கார தியானத்தால் பிரம்மா விலக்கிக் கொண்டார் என்பதால் அப்போதிலிருந்து விக்ன பரிகாரத்திற்காக கணபதியை வழிபட வேண்டும் என்ற சம்பிரதாயம் வேதத்திலிருந்து நமக்கு கிடைத்துள்ளது. இது ஒரு கடமையாக நமக்கு உபதேசிக்கப்பட்டுள்ளது.

ஓங்காரத்திலிருந்தே சகல வேதங்களும் தோன்றின. ஓம்காரத்தின் மூலக் கடவுள் கணபதி.

தெலுங்கில்: பிரம்மஸ்ரீ சாமவேதம் சண்முக சர்மா
தமிழில்: ராஜி ரகுநாதன்

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.