சென்னை:
திமுக தலைவர் கருணாநிதி வீட்டில் சிறை வைக்கப்பட்டு இருக்கிறார் என்ற மதிமுக பொதுச்செயலர் வைகோ பேச்சால் திமுகவில் சலசலப்பு ஏற்பட்டுள்ளது.
கருணாநிதிக்கு உடல்நலக் குறைவு ஏற்பட்டு ஓய்வில் இருக்கும் போதெல்லாம் அவர் வீட்டுச் சிறையில் வைக்கப்பட்டுள்ளார் என யாராவது கூறுவர். இதைக் கேட்டு, கருணாநிதி வழக்கம் போல எதையாவது செய்து கொண்டு இவை எல்லாம் வதந்தி என்று சொல்லி, அதற்கு முற்றுப் புள்ளி வைப்பார். இது வழக்கமான ஒன்றாகிவிட்டது.
இதே போல், கருணாநிதி அண்மையில் உடல்நலக் குறைவால் அவதிப்பட்ட நிலையில், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வீடு திரும்பினார். அதன்பின்னர் கருணாநிதியிடம் இருந்து எந்த ஒரு அறிக்கையும் வெளியாகவில்லை. வழக்கமாக கேள்வி பதில் பாணியில் உடன்பிறப்புக் கடிதம் எழுதியும், அறிக்கை விட்டும் தனது இருப்பைக் காட்டிக் கொண்டிருப்பார். ஆனால் இதுவரை அவர் பெயரில் அறிக்கை எதுவும் வெளியாகாமல் இருப்பது அரசியல் வட்டாரத்தில் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.
அண்மையில் திமுகவின் செயல் தலைவராக ஸ்டாலின் அறிவிக்கப்பட்டார். இந்த அறிவிப்பு வெளியிடப்பட்ட பொதுக்குழுவுக்கு கூட கருணாநிதி வரவில்லை. சில நாட்களுக்கு முன்னர் திருச்சியில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பேசிய மதிமுக பொதுச்செயலர் வைகோ, கருணாநிதி வீட்டுச் சிறையில் அடைக்கப்பட்டிருப்பதாகக் கூறினார். அத்துடன் கிளாடியேட்டர் திரைப்படத்தில் அரச பதவிக்காக தந்தையை மகன் கொலை செய்ய முயற்சிப்பதையும் சுட்டிக்காட்டியிருந்தார் வைகோ.
செயல் தலைவரான நிலையில் ஸ்டாலினின் செயல்பாடுகளில் திமுகவில் அதிருப்தி இருப்பதாகக் கூறப்பட்டு வந்த நிலையில் வைகோவின் பேச்சு திமுகவில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.