திமுக நிர்வாகி வீட்டில் பெட்ரோல் குண்டு வீச்சு: தூத்துக்குடியில் பரபரப்பு

தூத்துக்குடி: தூத்துக்குடியில் திமுக., நிர்வாகி வீட்டில் பெட்ரோல் குண்டுகள் வீசப்பட்டதால் பதற்றம் ஏற்பட்டது. தூத்துக்குடி சின்னக்கடை தெருவைச் சேர்ந்த பில்லா ஜெகன் தூத்துக்குடி மாவட்ட திமுக., இளைஞரணி துணை அமைப்பாளராக உள்ளார். மேலும் நடிகர் விஜய் மன்ற தலைவராகவும் உள்ளார். இன்று அதிகாலை பில்லா ஜெகன் வீட்டுக்கு வந்த மர்ம நபர்கள் சிலர், திடீரென 2 பெட்ரோல் குண்டுகளை அவர் வீட்டின் மீது வீசிவிட்டு தப்பிவிட்டனர். இதில் வீட்டின் முன்பு நின்ற பில்லா ஜெகன் மற்றும் அவரது வீட்டின் மாடியில் வசித்து வரும் அக்பர் ஷா என்பவரின் இருசக்கர வாகனங்கள் தீப்பிடித்து எரிந்தன. மேலும் வீட்டின் முன்புறம் இருந்த பொருட்களும் தீப்பிடித்து எரிந்தன. இதை அடுத்து பில்லா ஜெகனுடன் அப்பகுதி மக்களும் சேர்ந்து தீயை அணைத்தனர். பெட்ரோல் குண்டு வீச்சு குறித்து தகவல் அறிந்த தூத்துக்குடி மாவட்ட எஸ்.பி. அஸ்வின் கோட்னீஸ், ஏ.எஸ்.பி. அருள்சக்தி குமார், வடபாகம் போலீஸ் இன்ஸ்பெக்டர் சுரேஷ்குமார் உள்ளிட்ட போலீசார் சம்பவ இடத்துக்குச் சென்று விசாரணை நடத்தினர். போலீசார் நடத்திய விசாரணையில், அந்தப் பகுதியை சேர்ந்த சிலருடன் பில்லா ஜெகனுக்கு தகராறு ஏற்பட்டு முன்விரோதம் இருந்துள்ளது. இந்த விவகாரம் பெட்ரோல் குண்டுவீச்சுக்குக் காரணமாக இருக்கலாம் என போலீசார் சந்தேகித்தனர். இருப்பினும் மேற்கொண்டு விசாரணை நடத்தப் பட்டு வருகிறது. பில்லா ஜெகன் மீது போலீஸ் நிலையங்களில் 10க்கும் மேற்பட்ட வழக்குகள் உள்ளது குறிப்பிடத்தக்கது.