சென்னை:
மறைந்த நடிகர் திலகம் சிவாஜி கணேசனுக்கு கடந்த 2006ஆம் ஆண்டு ஜூலை 21ல் சென்னை மெரினா கடற்கரையில் காமராஜர் சாலை -டாக்டர் ராதாகிருஷ்ணன் சாலை சந்திப்பில் காந்தி சிலை எதிர்ப் பகுதியில் சிலை அமைக்கப்பட்டது. அப்போதைய முதல்வர் கருணாநிதி இந்தச் சிலையை திறந்து வைத்தார். பின்னர் சிவாஜி கணேசனுக்கு மணிமண்டபம் அமைக்கும் திட்டம் தமிழக அரசால் அறிவிக்கப்பட்டது.
அதன்படி, நடிகர் திலகம் சிவாஜி கணேசனுக்கு சென்னை அடையாறு பகுதியில் உள்ள ஆந்திர மகிளா சபா அருகில், தமிழக அரசு ரூ.2.80 கோடி செலவில் மணிமண்டபம் ஒன்றைக் கட்டியுள்ளது. இங்கு சிவாஜி கணேசன் நடித்த படங்களின் புகைப்படங்கள், அவர் அரசியல் தலைவர்களுடன் எடுத்துக் கொண்ட படங்கள் என 188 புகைப்படங்கள் வைக்கப்பட்டுள்ளன.
சென்னை மெரினா கடற்கரை சாலையில் டாக்டர் ராதாகிருஷ்ணன் சாலை சந்திப்பில் வைக்கப்பட்டிருந்த சிவாஜி சிலை போக்குவரத்து பிரச்னை காரணம் கூறி அங்கிருந்து அகற்றப்பட்டது. அங்கிருந்து அகற்றப்பட்ட சிவாஜி கணேசன் சிலை இந்த மணி மண்டபத்தின் நுழைவு வாயிலில்தான் நிறுவப்பட்டுள்ளது. சிவாஜி கணேசன் மணிமண்டபத்தை அக்.1 இன்று துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் திறந்து வைப்பார் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் சிவாஜி சிலை பீடத்தில் கருணாநிதி பெயர் அடங்கியிருந்த கல்வெட்டு அகற்றப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. இதற்கு திமுக செயல் தலைவர் ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் கூறியபோது, சிவாஜி சிலை பீடத்தில் இருந்து கருணாநிதி பெயர் அகற்றப்பட்டுள்ளது கண்டிக்கத்தக்கது. அரசியல் விளையாட்டுகளால் மன்னிக்க முடியாத துரோகத்தை செய்துள்ளார் முதலமைச்சர். சிவாஜி சிலை பீடத்தில் இருந்து கருணாநிதி பெயர் அகற்றப்பட்டது திரையுலகத்தையும், சிவாஜியின் ரசிகர்களையும் அவமானப்படுத்தும் செயல். சிறுபிள்ளைத்தனமான அரசியல் விளையாட்டு. சிவாஜி, கருணாநிதிக்குச் செய்யும் துரோகத்தை தமிழ் திரையுலகம் மன்னிக்காது என்றார்.