நாமக்கல்: திருச்செங்கோடு அருகே 11 ஆம் வகுப்பு மாணவி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு கொடூரமான முறையில் கொலை செய்யப்பட்டுள்ளார். அவரை பலாத்காரம் செய்து கொன்றதாக அவரது உறவினரும் காதலித்தவருமான இளைஞர் கைது செய்யப்பட்டுள்ளார். நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு அடுத்த இலக்கியம்பட்டியைச் சேர்ந்தவர் கட்டிடத் தொழிலாளி செல்வராஜின் இரண்டாவது மகள் ஸ்ரீஜா (17). இவர் பெரியமணலியை அடுத்த கோட்டைப்பாளையத்தில் பாட்டி வீட்டில் தங்கி 11 ஆம் வகுப்பு படித்து வந்தார். தினமும் சைக்கிளில் பள்ளிக்குச் சென்று வருபவர், நேற்று பள்ளிக்குச் சென்று சேரவில்லை. தேர்வு நேரத்தில் மாணவி வராததால் சந்தேகம் அடைந்த ஆசிரியர் மாணவியின் பெற்றோருக்கு போன் செய்து தகவல் கேட்டுள்ளனர். இதை அடுத்து, ஸ்ரீஜாவின் தந்தை செல்வராஜ், கோட்டைப்பாளையத்திற்குச் சென்று விசாரித்து மகளைத் தேடி பள்ளி செல்லும் வழியில் பார்த்தவாறு சென்றார். அப்போது, ஒரு தனியார் ரியல் எஸ்டேட் நிறுவனத்தினர் அமைத்த குடிசைக் கொட்டகை முன் ஸ்ரீஜாவின் சைக்கிள் இருந்துள்ளது. இதனால் சந்தேகம் அடைந்த செல்வராஜ், உள்ளே சென்று பார்த்தார். அப்போது, கொட்டகையில் ஒரு சாக்கு மூட்டை கிடந்தது. அதைப் பிரித்துப் பார்த்த போது மாணவி ஸ்ரீஜா பிணமாகக் கிடந்தார். இதைக் கண்டு அதிர்ச்சி அடைந்த செல்வராஜ் இது குறித்து போலீஸில் புகார் கொடுத்தார். அதை அடுத்து அங்கு வந்த நாமக்கல் மாவட்ட காவல்துறை சூப்பிரண்டு செந்தில்குமார், திருச்செங்கோடு உதவி கலெக்டர் சுமன், தாசில்தார் குப்புசாமி உள்ளிட்ட அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டனர். காவல் துறையினரின் தீவிர விசாரணையில் மாணவி ஸ்ரீஜா பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு அடித்துக் கொல்லப்பட்டது தெரியவந்தது. மேலும் இதில் ஒன்றுக்கும் மேற்பட்ட நபர்கள் ஈடுபட்டிருக்கலாம் என்றும் தெரியவந்தது. இதையடுத்து காவல்துறையினர் மாணவி ஸ்ரீஜாவின் உடலைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்நிலையில், மாணவி ஸ்ரீஜாவை திலீபன் (20) என்ற இளைஞர் கொலை செய்திருக்கலாம் என்று கருதிய செல்வராஜ், அவரை ஊர் மக்கள் உதவியுடன் பிடித்து எலச்சிப்பாளையம் காவல் நிலையத்தில் ஒப்படைத்தார். காவல்துறையினர் அவரிடம் விசாரணை நடத்தியபோது அவர் கொடுத்த தகவலின் அடிப்படையில், துஞ்சம்பாளையத்தைச் சேர்ந்த அவரது நண்பர் சந்தோஷ்(20), மற்றும் மாணவியுடன் படித்து வந்த சக மாணவர் பூளாச்சிப்பட்டியை சேர்ந்த மணிகண்டன்(17) இருவரையும் பிடித்து விசாரித்தனர். அப்போது 3 பேரும் மாணவியை பலாத்காரம் செய்து, கழுத்தை நெரித்துக் கொன்று உடலை சாக்குமூட்டையில் கட்டியது தெரியவந்தது. அவர்கள் 3 பேரையும் காவல்துறையினர் கைது செய்தனர். இது குறித்து, திலீபன் காவல்துறையினரிடம் கொடுத்த வாக்குமூலத்தில்…. நானும், ஸ்ரீஜாவும் உறவினர்கள். நாங்கள் இருவரும் காதலித்து வந்தோம். ஆனால் திடீரென ஸ்ரீஜா என்னுடன் பேசுவதைக் குறைத்து கொண்டார். இதுபற்றி அவரிடம் கேட்டபோது எந்த பதிலும் சொல்லவில்லை. என்னுடன் பழகுவதைப் புறக்கணித்தார். ஸ்ரீஜாவின் பிரிவு எனக்கு அதிர்ச்சி அளித்தது. நன்றாகப் பேசி வந்த காதலி திடீரென என்னை விலகிச் செல்ல என்ன காரணம் என்று விசாரித்த போது, அவர் தன்னுடன் படிக்கும் மாணவர் மணிகண்டனை காதலிப்பது தெரியவந்தது. அதனால் கோபமுற்ற நான் ஸ்ரீஜா மற்றும் மணிகண்டனை சந்தித்து காதலைக் கைவிடுமாறு கூறினேன். ஆனாலும் அவர்கள் தொடர்ந்து காதலித்து வந்தனர். என்னை ஏமாற்றியதால் ஸ்ரீஜா மீதும், என் காதலியை அபகரித்ததால் மணிகண்டன் மீதும் எனக்கு கோபம் ஏற்பட்டது. இதுபற்றி நான் எனது நண்பர் சந்தோஷிடம் கூறினேன். அவன் எனக்கு ஆறுதல் கூறினான். இந்நிலையில், நேற்று ஸ்ரீஜாவும், மணிகண்டனும் பள்ளிக்குச் செல்லும் வழியில் உள்ள ஒரு தனியார் ரியல் எஸ்டேட் நிறுவனத்தினர் அமைத்துள்ள கொட்டகையில் தனிமையில் இருப்பது தெரியவந்தது. அதனால் நானும் சந்தோஷும் அங்கே சென்றோம். அப்போது அவர்கள் இருவரையும் தனிமையில் பார்த்தேன். இது எனக்கு கொலை வெறியை ஏற்படுத்தியது. நான் அவர்களிடம் வாக்குவாதம் செய்தேன். எங்களுக்குள் அடிதடி மோதல் ஏற்பட்டது. தொடர்ந்து ஸ்ரீஜாவை நானும், எனது நண்பர் சந்தோஷும் பலாத்காரம் செய்தோம். பின்னர் அவள் மயக்கம் அடைந்தாள். இனியும் விட்டு வைத்தால் மீண்டும் மணிகண்டனுடன்தான் இருப்பாள் என்று கருதி நான் அவளை கொலை செய்ய முடிவு செய்தேன். மயக்கத்தில் இருந்த ஸ்ரீஜாவின் கழுத்தை நெரித்து கொலை செய்தோம். பின்னர் சாக்கு மூட்டையில் அவளது உடலை வைத்துக் கட்டிவிட்டு அங்கிருந்து வந்து விட்டோம். என்று கூறினார். தொடர்ந்து மாணவர் மணிகண்டனிடமும் காவல்துறையினர் விசாரணை நடத்தினர். அப்போது அவர் நாங்கள் 2 பேரும் காதலித்து வந்தோம் என்றும், தனிமையில் பேசிக் கொண்டு இருந்தபோது, திலீபன் மற்றும் அவரது நண்பர் ஆகியோர் என்னைத் தாக்கினர் என்றும் கூறினார். தொடர்ந்து அவரிடம் காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்தச் சம்பவம் அந்தப் பகுதியில் பெரும் பரபரப்பையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
திருச்செங்கோடு அருகே மாணவி பலாத்காரக் கொலை: காதலித்த உறவினரான இளைஞர் கைது
Popular Categories