சென்னை: தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கரிடம், ஒரு பெண் பத்திரிக்கையாளர் கேட்ட கேள்விக்கு பதிலளிக்காமல், அவர் அழகாக இருப்பதாகவும் அவர் தோற்றத்தைப் பற்றியே கூறியதும் அனைவரையும் அதிர்ச்சிக்கு உள்ளாக்கியுள்ளது.
தமிழக சட்டப்பேரவையில் 2018 ஆம் ஆண்டுக்கான பட்ஜெட் கூட்டம் நடைபெற்றது. பட்ஜெட் கூட்டத்திற்குப் பின், காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க மத்திய அரசை வலியுறுத்தி தீர்மானம் நிறைவேற்றப் பட்டது.
இந்நிலையில், அதைத் தொடர்ந்து நேற்று மாலை அதிமுக., எம்எல்ஏ.,க்களின் கூட்டம் சென்னையில் நடைபெற்றது. இந்தக் கூட்டத்திற்குப் பின் வெளியே வந்த தமிழக சுகாதாரத் துறை அமைச்சர் விஜயபாஸ்கரிடம், கூட்டத்தில் எதைப் பற்றி விவாதிக்கப்பட்டது என ஒரு பெண் செய்தியாளர் கேள்வி கேட்டுள்ளார்.
ஆனால் அமைச்சர் விஜயபாஸ்கர், அவர் கேட்ட கேள்விக்கு பதிலளிக்காமல், அவரை தவிர்க்கும் நோக்கிலேயே கடந்து சென்றார். ஆனால் விடாமல் அந்தப் பத்திரிக்கையாளர் துரத்திக் கேட்க, அவரின் கேள்விக்கு பதிலளிக்காமல், அவருடைய கண்ணாடி அழகாக உள்ளது எனவும், அவர் அழகாக இருப்பதாகவும் அவர் தோற்றத்தைப் பற்றியும் பதில் கூறி விலகிச் சென்றார்.
ஆனால் அந்தப் பெண் பத்திரிக்கையாளரோ அவரை விடாமல் மேலும் துரத்தி, பலமுறை அந்தக் கூட்டத்தைப் பற்றி கேள்வி எழுப்பிய போதும், அமைச்சர் தொடர்ந்து நீங்கள் அழகாக இருக்கிறீர்கள் என்று அதையே மூன்று முறை கூறிவிட்டுச் சென்றார். இது, அங்கிருந்த பத்திரிகையாளர்கள் மத்தியில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.
இப்படி, ஊடகங்கள் முன்னிலையில், அமைச்சர் ஒருவர் பெண் பத்திரிக்கையாளரிடம் அநாகரிகமாக பேசியது பெரும் சர்ச்சைக்கு உள்ளாகியுள்ளது.
இதனிடையே, தனது செயலுக்கு வருத்தம் தெரிவித்த விஜயபாஸ்கர், தான் அவ்வாறு சொல்லவில்லை என்றும், அனைத்து பத்திரிகையாளர்களையும் சகோதர சகோதரியாகவே நான் பார்க்கிறேன் என்றும் பதில் கூறினார் விஜயபாஸ்கர். இதை பெரிய விவகாரம் ஆக்காதீர்கள், அனைவருடனும் நான் நன்கு பழகி வருகிறேன் என்று கூறியவர், தன்னிடம் கேட்கப்பட்ட அரசியல் கேள்விகளை தவிர்ப்பதற்காகவே அவ்வாறு கூற முற்பட்டதாகவும் விளக்கம் அளித்தார்.
தனக்கு யார் மனதையும் புண்படுத்தும் நோக்கம் இல்லை என்றும், என்னுடைய வருத்தத்தை நான் தெரிவித்துக் கொள்கிறேன், குறிப்பிட்ட அந்த சகோதரியிடமே பேசிவிட்டேன் என்றும் கூறினார்.,
ஆனாலும், விடாமல் அரசியல் குறித்த கேள்வியைத் தவிர்க்க வேண்டுமென்றால், நீங்க அழகா இருக்கீங்க என்று சொல்வது எப்படி ஒரு பொறுப்பான பதிலாகும் என்று அமைச்சரிடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். டாக்டர் சி.விஜயபாஸ்கர் மக்கள் நல்வாழ்வு மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சராகப் பதவி வகிக்கிறார் என்பது குறிப்பிடத் தக்கது.