December 3, 2021, 12:49 pm
More

  குழந்தையை கடத்த வந்ததாகக் கருதி கிராமத்தினர் தாக்கியதில் மூதாட்டி உயிரிழப்பு: திருவண்ணாமலை அருகே சோகம்!

  என்ன என்பதைக் காது கொடுத்துக் கூட கேட்காமல், காரில் வந்த அப்பாவிகள் மீது காட்டுமிராண்டித்தனமாகத் தாக்கியதில், 65 வயதான ருக்மிணி பரிதாபமாக உயிரிழந்துள்ளார். படுகாயம் அடைந்த வெங்கடேசன், மோகன்குமார் ஆகியோர் வேலூர் மருத்துவமனையிலும், சந்திரசேகரன், கஜேந்திரன் ஆகியோர் திருவண்ணாமலை மருத்துவமனையிலும் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டனர்.

  thiruvannamala - 1


  • திருவண்ணாமலை மாவட்டம் போளூர் அருகே அத்திமூரில் குழந்தையை கடத்த வந்ததாகக் கருதி பெண் அடித்துக் கொலை செய்யப் பட்டார்.
  • திருவண்ணாமலை மாவட்டம் அத்திமூர் கிராமத்தில் கோயிலுக்கு வந்த 5 பேர் மீது தாக்குதல் நடத்தப் பட்டது.
  • குழந்தை கடத்தல் கும்பல் என நினைத்து தாக்கியதால் பரபரப்பு.
  • தாக்குதலில் ஒரு பெண் உயிரிழப்பு; 4 பேர் மருத்துவமனையில் அனுமதி.

  திருவண்ணாமலை மாவட்டம் ஜவ்வாது மலை அருகே குழந்தைகளைக் கடத்த வந்தாகக் கருதி, பெண் உட்பட 5 பேரை கிராம மக்கள் அடித்து உதைத்தனர். இதில் சென்னையைச் சேர்ந்த 65 வயது மூதாட்டி உயிரிழந்தார்.

  சென்னை பல்லாவரத்தைச் சேர்ந்த ருக்மிணி, வெங்கடேசன் ஆகியோர் மலேசியாவிலிருந்து வந்திருந்த உறவினர்கள் மோகன்குமார் , சந்திரசேகரன் ஆகியோரை அழைத்துக் கொண்டு திருவண்ணாமலை மாவட்டம் ஜவ்வாது மலை அடிவாரத்தில் தண்ணீர்குளம் பகுதிக்கு தங்களின் குல தெய்வக் கோயிலில் வழிபாடு செய்வதற்காக காரில் சென்றனர். காரை கஜேந்திரன் என்பவர் ஓட்டிச் சென்றார்.

  இவர்கள் கோவிலின் அருகே சென்ற போது, அங்கே ஒரு 4 வயதுக் குழந்தை விளையாடிக் கொண்டிருந்தது. அதைக் கண்டதும் காரில் இருந்தவர்கள் அந்தக் குழந்தைக்கு சாக்லேட்கள் கொடுத்ததாகக் கூறப்படுகிறது.

  இதைக் கண்ட அப்பகுதி மக்கள், காரில் வந்தவர்கள் குழந்தையைக் கடத்துவதாக நினைத்தனர். உடனே ஓடிச் சென்று, காரில் இருந்தவர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளனர்.

  இதன் பின்னர், ருக்மிணி உள்ளிட்டோட் அந்தக் காரில் ஏறி விருட்டென அங்கிருந்து சென்று விட்டனர். இதனிடையே, குழந்தை கடத்தல்காரர்கள் காரில் வருவதாக அத்திமூர் பகுதி மக்களுக்கு அந்தக் குழந்தையின் உறவினர்கள் தகவல் கொடுத்துள்ளனர். அவ்வாறே அத்திமூர் பகுதிக்கு கார் வந்த போது, அந்த கிராமமே ஒன்று திரண்டு, காரை மடக்கியது. காரில் வந்தவர்கள் அச்சத்தில் ஆழ்ந்தனர். ஆனால், கண்ணிமைக்கும் நேரத்தில் காரில் இருந்தவர்களை கீழே இழுத்துப் போட்டு, சரமாரியாக அடித்து உதைத்துள்ளனர் அப்பகுதியினர்.

  thiruvannamalai pen - 2

  கீழே விழுந்ததில் பலத்த காயம் அடைந்து, ஆடை கிழிந்து படுகாயத்துடன் குற்றுயிராகக் கிடந்தவர்களையும் சூழ்ந்து நின்று கொடூரத் தாக்குதல் நடத்தியுள்ளனர் அந்த கிராமத்தினர்.

  இப்படி நடந்தது என்ன என்பதைக் காது கொடுத்துக் கூட கேட்காமல், காரில் வந்த அப்பாவிகள் மீது காட்டுமிராண்டித்தனமாகத் தாக்கியதில், 65 வயதான ருக்மிணி பரிதாபமாக உயிரிழந்துள்ளார். படுகாயம் அடைந்த வெங்கடேசன், மோகன்குமார் ஆகியோர் வேலூர் மருத்துவமனையிலும், சந்திரசேகரன், கஜேந்திரன் ஆகியோர் திருவண்ணாமலை மருத்துவமனையிலும் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டனர்.

  கடந்த காலங்களில், பரவலாக குழந்தைக் கடத்தல் குறித்து பல செய்திகள் உலா வருவதும், அதை காரணமாக வைத்து குழந்தைகளைக் கடத்த வந்தவர்கள் என்ற சந்தேகம் எழுந்து வட மாநிலங்களைச் சேர்ந்தவர்கள், மனநலம் பாதிக்கப்பட்டவர்கள் உள்ளிட்டோரை கண்மூடித் தனமாகத் தாக்குவது அதிகரித்துள்ளது. இத்தகைய பின்னணியில் ஒரு மூதாட்டியை அடித்தே கொன்றிருப்பது தமிழகத்தில் பலத்த அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

  இதை அடுத்து அத்திமூர் கிராமத்தில் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் பொன்னி தலைமையில் போலீஸார் குவிக்கப்பட்டனர். கொலை நடந்ததை அடுத்து கடைகள் அடைக்கப்பட்டன. கிராமம் வெறிச்சோடியது. போலீஸார் வீடு வீடாகச் சென்று தாக்குதலில் ஈடுபட்டது தொடர்பாக பலரை பிடித்துச் சென்றனர்.

  இந்நிலையில், மூதாட்டி குழந்தைக்கு சாக்லேட் கொடுத்ததால், கடத்த வந்ததாகக் கருதி செய்தி கொடுத்த அந்தக் குழந்தையின் பெற்றோரும் காவல் நிலையத்திற்கு அழைத்துச் செல்லப் பட்டனர்.

  உடனுக்குடன் தினசரி தமிழ்ச் செய்திகளை உங்களது டெலிகிராம் ஆப்.,பில் பார்க்கலாம்!
  தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!

  https://t.me/s/dhinasari

  Latest Posts

  spot_imgspot_img

  Follow Dhinasari on Social Media

  18,105FansLike
  370FollowersFollow
  47FollowersFollow
  74FollowersFollow
  1,779FollowersFollow
  0SubscribersSubscribe
  -Advertisement-