கார் விபத்தில் படுகாயம் அடைந்த கேரள இளைஞருக்கு சிகிச்சைக்கு வைகோ உடனடி ஏற்பாடு செய்தார்.
வியாழக்கிழமை இன்று (7.6.2018) பிற்பகல் 2 மணி அளவில் கோவை மதுக்கரை அருகில் பாலக்காடு நெடுஞ்சாலையில், கேரளத்தில் இருந்து வந்த ஒரு கார் லாரியில் மோதி, சாலையில் இருந்து தூக்கி வீசப்பட்டு அப்பளம் போல் நொறுங்கியது.
காரை ஓட்டி வந்த இளைஞரை அப்பகுதி வாழ் இளைஞர்கள், காரில் இருந்து வெளியே எடுத்து 108 ஆம்புலன்சுக்குத் தொடர்பு கொண்டு வரவழைத்தனர். அதே நேரத்தில் அந்த வழியாக வந்த ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ, மற்றும் கோவை மதிமுக., நிர்வாகிகள், அந்த இளைஞரை ஆம்புலன்சில் ஏற்றி அனுப்ப உதவினர்.
பின்னர், கோவை அரசு மருத்துவமனை இயக்குநரிடம் வைகோ செல்போன் மூலம் தொடர்பு கொண்டு பேசி, விபத்து குறித்த தகவலைச் சொல்லி, அந்த இளைஞருக்குத் தகுந்த சிகிச்சை அளிக்க வேண்டுமெனக் கேட்டுக் கொண்டார். அதைக் கேட்ட இயக்குனரும், உடனடியாக ஏற்பாடு செய்வதாக உறுதி அளித்தார். இதை அடுத்து, அந்த இளைஞருக்கு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.