திருநெல்வேலி: நெல்லை மாவட்டத்தின் 143 அடி கொள்ளளவு கொண்ட பாபநாசம் அணையின் நீர் மட்டம் தற்போது 130 அடியாக உயர்ந்துள்ளது. வினாடிக்கு 10 ஆயிரம் கன அடி நீர் வந்து கொண்டிருக்கிறது. இரவு முதல் 4 ஆயிரம் கன அடி நீர் வெளியேற்றப்படுகிறது.
சேர்வலாறு அணையின் ஐந்து கேட்டுகள் திறக்கப்பட்டன. சரியாக இன்று இரவு 7 மணி அளவில் இருந்து நீர் வெளியேற்றம் அதிகரித்திருக்கிறது. முண்டந்துறை பாலத்திற்கு மேலே தண்ணீர் செல்கிறது எனவே, வாகனங்களில் செல்ல முடியாது!
சேர்வலாறு அனணயிலிருந்து தண்ணீர் கூடுதலாக திறக்கப்படுவதால் தாமிரபரணி ஆற்றுக் கரையோரங்களில் வசிக்கும் மக்கள் பாதுகாப்பாக இருக்க திருநெல்வேலி மாவட்ட ஆட்சியர் வேண்டுகோள் விடுத்துள்ளார். சேர்வலாறு அணையில் இருந்து அதிக நீர் திறக்கப்பட்டுள்ளதால், தாமிரபரணி ஆற்றில் வெள்ள அபாயம் ஏற்பட்டுள்ளது.
தொடர் மழையின் காரணமாக நெல்லை மாவட்டம் கடனா அணை வேகமாக நிரம்பி வருகிறது. எனவே ஆற்றங்கரையோரம் வசிக்கும் மக்கள் பாதுகாப்பான இடத்திற்கு செல்லவும் ஆற்றில் குளிக்கச் செல்ல வேண்டாம் எனவும் மாவட்ட நிர்வாகத்தால் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர். ராமாநதி அணியிலிருந்து 150கன அடி தண்ணீர் திறந்து விட உள்ளதாக உதவி பொறியாளர் தகவல் தெரிவித்துள்ளார்.
கருப்பாநதி அணை மீண்டும் நிரம்பியதால் வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பபட்டது! நெல்லை மாவட்டம் கடையநல்லூர் கருப்பாநதி அணை பகுதியில் தொடர் மழை பெய்து வருவதால் அணைக்கு வரும் 600 கன அடி தண்ணீர் அப்படியே வெளியே வெள்ளமாக பாய்ந்தோடுகிறது!