தூத்துக்குடி: விமானத்தினுள் பாஜக., தமிழக தலைவர் தமிழிசையை அவமானப் படுத்தும் வகையில் தொடர்ந்து குரல் எழுப்பிக் கொண்டிருந்த பெண் சோபியா, பின்னர் தமிழிசையின் புகாரின் பேரில் கைதாகி, ஜாமீனில் வெளிவந்துள்ளார்.
அவருக்கு ஜாமீன் வழங்கும்போது, பாஸ்போர்ட்டை ஒப்படைக்கும்படி நீதிமன்றம் கூறிய நிலையில், வழக்கு விசாரணையின் போது, காலாவதியான பழைய பாஸ்போர்ட்டை சோபியா வழங்கியிருக்கிறார். இதைக் கண்டு போலீஸார் அதிர்ச்சி அடைந்தனர்.
இந்நிலையில், வரும் 8ஆம் தேதி பாஸ்போர்ட்டுடன் தூத்துக்குடி – புதுக்கோட்டை காவல் நிலையத்தில் ஆஜராகும்படி மாணவி சோபியாவுக்க்கு போலீஸார் சம்மன் அனுப்பியுள்ளனர்.
காவல் நிலையத்தில் இருந்து சோபியாவின் வீட்டுக்குச் சென்ற ஏட்டு அவரின் ஒரிஜினல் பாஸ்போர்ட்டை எடுத்துக் கொண்டு 8ஆம் தேதி தூத்துக்குடி காவல் நிலையத்துக்கு வரவேண்டும் என்று அறிவுறுத்திச் சென்றிருக்கிறார்.
ஏற்கெனவே, சோபியாவின் தந்தை தாம் ஒரு தேவேந்திர குல வேளாளர் என்று சாதியின் பின்னணியை காவல் நிலையத்தில் அளித்த புகாரில் குறிப்பிட்டிருந்தார். சாதி குறித்த பிரச்னை ஏதும் இல்லாத நிலையில், இவர் ஏன் சாதியைக் குறித்தார் என்று கேள்விகள் எழுப்பப் பட்டன.
இது குறித்து ஒரு டிவியில் அளித்த பேட்டியில், தன் மகள் சோபியா ஓர் அறிவியல் மாணவி என்றும், அவருக்கு சட்டம் குறித்து எந்தப் பயிற்சியும் இல்லை என்றும், அவர் ஒரு வெகுளிப் பெண் என்றும் குறிப்பிட்டார்.
இந்நிலையில், நீதிமன்றம் பாஸ்போர்ட்டை ஒப்படைக்கச் சொன்ன நிலையில், காலாவதியானதை தேர்வு செய்து விசாரணைக்கு வழங்கிய வகையில் அவர் ஒரு வெகுளிப் பெண் தான் என்பது உறுதியாகியுள்ளதாக நெட்டிசன்கள் கருத்துகளைத் தெரிவித்து வருகின்றனர்.