விநாயகர் சிலையை மறித்தது யார்? எதற்காக மறித்தார்கள்? என்ற கேள்வியுடன், எஸ்டிபிஐ., அமைப்பு வெளியிட்டுள்ள செய்தியில், செங்கோட்டையில் நிகழ்ந்த வன்முறைக்குக் காரணம், சங்க பரிவார்களை கட்டுப்படுத்தாமல் வைத்திருப்பது தான் என்று கூறப் பட்டுள்ளது.
அந்த அமைப்பின் சார்பில் ஊடகங்களுக்கு சுற்றுக்கு விட்ட அறிவிப்பில்… செங்கோட்டையில் இந்து முன்னணி சங்க பரிவார்களை காவல்துறை கட்டுப்படுத்த தவறியதன் விளைவே நடந்த வன்முறைக்கு காரணமாகும்.
இந்நிலையில் சங்க பரிவார்களின் வன்முறையில் இருந்து சமூகத்தில் அமைதியை நிலைநிறுத்த வேண்டி முஸ்லீம்கள் தரப்பு எடுத்த முயற்சியை மாவட்ட ஆட்சித் தலைவர் வெளிப்படையாக பாராட்டிய நிலையில் காவல் துறை பல அப்பாவி முஸ்லிம்களை கைது செய்ததோடு மட்டும் அல்லாமல் குண்டர் சட்டத்தின் கீழ் சிறையில் அடைப்பது என்பது வன்மையாக கண்டிக்கத்தக்கது.
அதோடு குற்றவாளிகளையும் நீதியாளர்களையும் ஒன்றாகப் பார்க்கும் மாவட்ட ஆட்சித் தலைவரின் செயல்பாடு உள்ளொன்றும் புறமொன்றும் பேசும் போக்கை காட்டுகின்றது. எனவே சமாதான முயற்சியில் ஈடுபட்ட முஸ்லீம்களின் மீது போடப்பட்ட வழக்குகளோடு எஸ்.டி.பி.ஐ கட்சி நிர்வாகிகள் உட்பட 6 பேர் மீது போடப்பட்ட குண்டர் தடுப்பு சட்டதை ரத்து செய்யவேண்டும்.
மாவட்ட ஆட்சித் தலைவர் மற்றும் மாவட்ட கண்காணிப்பாளரின் அநீதியான நடவடிக்கைகளை கண்டித்து மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலகத்தை முற்றுகை இட்டுப் போராட்டம் நடத்தப்படும்.
நாள் : 03/10/2018 நேரம்: மாலை 3:00 மணி இடம் : மாவட்ட ஆட்சி தலைவர் அலுவலகம் – என்று செய்தி தெரிவிக்கப் பட்டுள்ளது.
செங்கோட்டையில் அமைதியாகச் சென்று கொண்டிருந்த ஊர்வலத்தில் தங்கள் வீடுகளின் மாடிகளில் இருந்து கல்லெறிந்து விநாயகர் திருவுருவை சிதைத்தவர்கள் முழுக்க முழுக்க முஸ்லிம்களே! அவர்கள் மட்டும் வன்முறையைக் கையிலெடுத்து, கல்லும் ஒரு கூர்மையான ஆயுதம்தான் என்பதை நன்றாக நினைவில் கொண்டிருந்தும், கல்லை எடுத்து ஊர்வலப் பாதையில் வந்தவர்கள் மீது எறிந்திருக்காவிட்டால், கால் நூற்றாண்டு கடந்து அமைதியாக சென்று கொண்டிருக்கும் ஊர்வலம் அப்படியே நடந்து முடிந்திருக்கும்!
அமைதியாக வாழ நினைக்கும் செங்கோட்டை நகர இஸ்லாமியப் பெரியவர்கள் சொல்வதும் இதைத்தான். வன்முறையைக் கையிலெடுத்த இஸ்லாமிய அடிப்படைவாத இயக்கங்களின் இளைஞர்கள் மட்டும் இங்கே வந்திருக்காவிட்டால், ஊருக்குள் இந்தப் பிரச்னையே வந்திருக்காது என்பதுதான்!
பிரச்னையின் ஆணிவேரை நன்கு அறிந்திருந்ததால்தான் அன்று மாவட்ட ஆட்சியர், கல்லெறிந்தது யார் என்பது எங்களுக்குத் தெரியும், அதற்கான அனைத்து வீடியோக்களும் எங்களிடம் இருக்கின்றன என்று சொன்னார்.
அதுமட்டுமல்ல, மறு நாள் மதியம், மீண்டும் கல்லெறிந்து பிரச்னை செய்த போது, விநாயகர் சதுர்த்தி ஊர்வலம் அமைதியாகச் செல்ல ஒத்துழைப்பு கொடுக்குமாறு இஸ்லாமிய இளைஞர்கள் மத்தியில் வந்து கெஞ்சிக் கேட்டுக் கொண்டதன் அடிப்படையில், அந்த இரண்டு மணி நேரம் அமைதியாக இருந்த காரணத்துக்காக நேரில் வந்து நன்றி சொல்லிவிட்டுப் போனார்.
கல்லெறிந்து மேலும் மேலும் பிரச்னையை வளர்க்காமல் இருந்ததற்காகத்தான் நன்றி சொல்ல வந்தாரே தவிர, சமூகத்தில் அமைதியை நிலைநிறுத்த முஸ்லிம்கள் எடுத்த முயற்சிக்காக அல்ல!! இதுதான் உண்மை நிலை!
தங்கள் தெய்வம் இப்படி இஸ்லாமியர்களால் கல்லடிக்கு ஆளானதே என்ற கொதிப்பில் பதிலுக்கு தாக்குதல் தொடுக்க இந்து இளைஞர்களும் கல்லைக் கையில் எடுத்ததால்தான், அப்பாவிகளான அவர்கள் மீது இப்போது குண்டர் சட்டப்படி கைது நடவடிக்கை எடுக்கப் பட்டுள்ளது.
வருடத்துக்கு ஒரு நாள் தங்கள் தெய்வத்துக்கு அவர்கள் செய்ய நினைக்கும் வழிபாட்டு உரிமையைக் கூட நடத்த விடாமல் தடை செய்து, அதற்கு இஸ்லாமியர்கள் தீங்கு விளைவிக்காமல் இருந்திருந்தால், இப்போது அப்பாவி இந்து இளைஞர்கள் குண்டர் சட்டத்தில் உள்ளே சென்றிருக்க வேண்டிய நிலையும் வந்திருக்காது.
இதனால்தான், பாஜக., தங்கள் தரப்பு அப்பாவி இந்து இளைஞர்கள் மீது காவல் துறை கடும் நெருக்கடிகளை ஏற்படுத்தி, கைது செய்ததைக் கண்டித்து ஆர்ப்பாட்டம் நடத்தியது. அதுவும் 144 தடை உத்தரவு இருந்த காரணத்தால் ஆலங்குளத்தில் ஆர்ப்பாட்டத்தை நடத்தி, அப்பாவி இந்து இளைஞர்கள் மீது போலீஸார் போட்டுள்ள பொய் வழக்குகளை திரும்பப் பெற வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்து ஆர்ப்பாட்டம் செய்தது.
ஆனால், செய்வதை எல்லாம் செய்துவிட்டு, இப்போது ஊரே ரெண்டு பட்டு விட்ட நிலையில், மீண்டும் மீண்டும் கலவரத்தைத் தூண்டி விடுவோர் மீது உள்ளூர் இஸ்லாமியப் பெரியவர்கள்தான் கட்டுப்பாட்டைச் செலுத்தி, அவர்களை நல்வழிப் படுத்தி, மீண்டும் பதற்ற நிலை வராமல் செய்விக்க வேண்டும். இல்லாவிட்டால், பிளவுபட்ட மனங்களுக்குள் பிளவு பெரிதாகுமே தவிர, என்றைக்கும் ஒட்டாது!