நாகர்கோயில்: சபரிமலை ஐயப்பன் கோவிலில் அனைத்து வயதுப் பெண்களையும் அனுமதிக்க முடிவு எடுத்துள்ள இந்து விரோத கேரள அரசை கண்டித்தும், மறு சீராய்வு மனு போடாத தேவசம் போர்டை கண்டித்தும் குமரி மாவட்ட இந்து முன்னணி சார்பில் ஆர்ப்பாட்டம் நடத்தப் பட்டது.
குமரி மாவட்ட இந்து அன்னையர் முன்னணியைச் சேர்ந்த 300க்கும் அதிகமான பெண்கள் கலந்து கொண்ட இந்த ஆர்ப்பாட்டத்தில், கேரள அரசையும் தேவசம் போர்டையும் கண்டித்து கோஷங்கள் எழுப்பப் பட்டன.
குமரி மாவட்டம் தக்கலை பழைய பேருந்து நிலையம் அருகே வெள்ளிக்கிழமை மாலை 4 மணி அளவில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில், அனைத்து இந்துக்களும் ஆகம விதிமுறைகளையும் கலாச்சாரத்தையும் காத்திட வேண்டும் என்று கோரிக்கை வைக்கப் பட்டது.
இந்த ஆர்ப்பாட்டத்துக்கு மாவட்ட தலைவர் மிசா சி.சோமன் தலைமை தாங்கினார்.
மாநில செயற்குழு உறுப்பினர் குழிச்சல் சி.செல்லன் மாவட்ட துணை தலைவர்கள் அசோகன், ராஜேஸ்வரன், கங்கதாரன், பொருளாளர் மது , மாவட்ட செயலாளர் ரவி, மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் செந்தில் குமார், கிருஷ்ணதாஸ் ஜெயக்குமார், மணிகண்டன் மற்றும் பாஜக., மாவட்ட தலைவர் எஸ்.முத்து கிருஷ்ணன், பாஜக தர்மராஜ், குமரி ப.ரமேஷ், தங்கப்பன்மற்றும் இந்து அன்னையர் முன்னணி நிர்வாகிகள், மாவட்ட, ஒன்றிய, நகர, கிளை கமிட்டி பொறுப்பாளர்கள் ஆகியோருடன் ஐயப்ப பக்தர்களும் கணிசமான அளவில் கலந்துகொண்டனர்.
ஆர்ப்பாட்டத்தின் முடிவில், ஆகம விதிகளை கடைபிடிப்பதன் மூலம் பெண்கள் 10 வயது முதல் 50 வயது வரை சபரிமலைக்கு செல்ல மாட்டோம் என உறுதிமொழி எடுத்துக் கொண்டனர்